வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8-வது சர்வதேச யோகா தினத்திற்கான கவுண்ட் டவுன்: 75 இடங்களில் யோகா பயிற்சி மற்றும் செய்முறை நிகழ்ச்சிகள்

Posted On: 03 MAY 2022 11:30AM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் கவுண்ட் டவுன்னாக, பொதுவான யோகா நெறிமுறைகள் பற்றிய நிகழ்ச்சியை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் இன்று நடத்தின. வெளிநாடுகள் உட்பட மொத்தம் 75 இடங்களில் இரண்டு அமைச்சகங்களும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இரண்டு அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைகளின் மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி புதுதில்லியில் இருந்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெளி ஆசியாவின் முதல் மற்றும் உலகின் பழமைவாய்ந்த திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயத்திலிருந்தும் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புதுதில்லியின் நிர்மான் பவனில் நடைபெற்ற யோகா பயிற்சி மற்றும் செய்முறை நிகழ்ச்சிக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி தலைமை வகித்தார். புதுதில்லியில் நடைபெற்ற பிரதான யோகா நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர் திரு பங்கஜ் ஜெயின், அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட செய்தி நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்டது. அதில்,  சர்வதேச யோகா தினத்தின் கவுண்ட் டவுன்னாக இரண்டு அமைச்சகங்களும் இன்று பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சியை அவர் பாராட்டினார். யோகா என்பது தசை செயல்பாடுகளின் கலவையை உள்ளடக்கிய உடல்- மன உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும் என்றும், ஆன்மா, சுவாசம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் நேரடியாக கவனம் செலுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகாவை முழுமையான அணுகுமுறையாக மேற்கத்திய நாடுகளும் தற்போது அங்கீகரித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஒரே சீராக, உலகம் முழுவதும் யோகா தற்போது அங்கீகரிக்கப்படுவதுடன், மாற்று மருத்துவமுறையாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை ஆயுஷ் அமைச்சகம் கொண்டாடி வருகிறது. இந்த வருடம் விடுதலையின் அமிர்த மகோத்சவத்தைக் குறிக்கும் வகையில் 100 வெவ்வேறு நிறுவனங்களின் பங்களிப்போடு 100 நாள் கவுண்ட் டவுன் நிகழ்ச்சிகளை மார்ச் 13-ஆம் தேதி ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியது. இதன்படி, பொதுவான யோகா நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஆயுஷ் அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. அந்த அடிப்படையிலேயே இன்றைய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822258

***************


(Release ID: 1822279) Visitor Counter : 338