விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் காணொளி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் உரையாற்றுகிறார்
Posted On:
27 APR 2022 6:08PM by PIB Chennai
நாட்டின் 75-வது விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடை பெற்று வரும் “விவசாயிகளின் பங்களிப்பிற்கு முன்னுரிமை என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின்” கீழ் இன்று நடைபெற்ற பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிர் காப்பீடு குறித்த இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், ஏராளமான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சுமார் 5.5 கோடி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டிற்கு விண்ணப்பித்ததாகவும், தற்போது வரை சுமார் 21000 கோடி ரூபாய் பிரீமியம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் விவசாயிகள் 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான காப்பீட்டுத் தொகையை கோரிக்கையாகப் பெற்றுள்ளனர். பல்வேறு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு எதிராக நாட்டின் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் மாநிலங்கள் இத்திட்டத்தின் (PMFBY) கீழ் காப்பீடு செய்ய முன் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் பயிர் காப்பீட்டின் பாதுகாப்புக் கவசம் குறித்து எடுத்துரைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்த அவர், விவசாயிகள் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, வேளாண் கடன் அட்டையை (KCC) பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதன் மூலம் கடன் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கும் என்றார். விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் (FPOs) சேரவும், தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த e-NAM இணையதளத்தில் பதிவு செய்யவும் அமைச்சர் வலியுறுத்தினார். வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் (AIF) உதவியுடன் பண்ணை உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும், இது சிறு விவசாயிகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் அமைச்சர் விளக்கினார். விவசாயிகளை ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஈடுபடவும், மீன்வளம் மற்றும் பால் பண்ணையை ஆகியவற்றின் மூலம் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் ஊக்குவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820620
*******
(Release ID: 1820705)
Visitor Counter : 1397