குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
அமெரிக்க நவீன ஆடைகள் நிறுவனமான "படகோனியா", காதி டெனிமிற்கு வழங்கியுள்ள தொடர் கொள்முதல் ஆணைகள் காதி நிறுவனத்தின் உலகளாவிய பெருமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன
Posted On:
14 APR 2022 2:42PM by PIB Chennai
அமெரிக்காவின் முன்னணி நவீன ஆடைகள் நிறுவனமான படகோனியா, காதி டெனிம் துணியை வாங்குவதற்க்கான கொள்முதல் ஆணைகளை மீண்டும் வழங்கியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு மற்றும் குறித்த காலத்தில் சரக்குகளை வழங்குவது ஆகியவற்றில் காதி நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், படகோனியா, ஜவுளி நிறுவனமான அரவிந்த் மில்ஸ் மூலம், குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டைச் சேர்ந்த காதி நிறுவனமான உத்யோக் பார்தியிடம் இருந்து .80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 17,050 மீட்டர் காதி டெனிம் துணியை வாங்குவதற்கான கொள்முதல் ஆணையை வழங்கியது. 1.08 கோடி ரூபாய் மதிப்புள்ள 30,000 மீட்டர் காதி டெனிம் துணிக்கான முந்தைய ஆர்டரை வெற்றிகரமாக முடித்த பிறகு மீண்டும் கொள்முதல் ஆணை கிடைத்துள்ளது.
டெனிம் ஆடைகள் தயாரிக்க கைவினைப்பொருளான காதி டெனிம் துணியை படகோனியா பயன்படுத்துகிறது.
2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) அகமதாபாத்தில் உள்ள அரவிந்த் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் உலகம் முழுவதும் காதி டெனிம் தயாரிப்புகளை வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன் பிறகு, அரவிந்த் மில்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் குஜராத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சான்றளிக்கப்பட்ட காதி நிறுவனங்களிடமிருந்து அதிக அளவு காதி டெனிம் துணிகளை கொள்முதல் செய்கிறது. சமீபத்திய ஆர்டரின் மூலம், படகோனியாவின் மொத்த காதி டெனிம் கொள்முதல் 1.88 கோடி ரூபாய் மதிப்பில் 47,000 மீட்டராக உயர்ந்துள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா, படகோனியாவிலிருந்து மீண்டும் கொள்முதல் செய்ய ஆணைகள் பெறப்பட்டுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்தார். கொள்முதல் ஆணைகளின் விநியோகத்தில், உயர் தரம், உற்பத்தியின் சீரான தன்மை மற்றும் துணிகளை சரியான நேரத்தில் வழங்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார். முந்தைய கொள்முதல் ஆணைகளின் அட்டவணையின்படி சரியாக 12 மாதங்களில் துணிகள் அனுப்பப்பட்டதாகவும், காதி டெனிம் துணிகளுக்கான மறுகொள்முதல் ஆணைகள், மாண்புமிகு பிரதமர் அவர்களின் 'உள்ளூரில் இருந்து முதல் உலகளாவியது வரை' என்ற லட்சியத்திற்கு காதி ஒரு சிறந்த உதாரணம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816747
----
(Release ID: 1816777)
Visitor Counter : 161