விவசாயத்துறை அமைச்சகம்

எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைதல்

Posted On: 29 MAR 2022 2:57PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

நாட்டில் எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் கீழ், மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் குறித்த விளக்கங்கள், விவசாய முறை பற்றிய செயல் விளக்கம், அதிக மகசூல் தரும் வகைகள்/கலப்பினங்களின் விதை உற்பத்தி மற்றும் விநியோகம், மேம்படுத்தப்பட்ட பண்ணை இயந்திரங்கள்/வள பாதுகாப்பு இயந்திரங்கள்/கருவிகள், நீர் உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகிறது.

பயன்பாட்டு கருவிகள், தாவர பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து மேலாண்மை/மண் மேம்பாடு, பயிர் முறை சார்ந்த பயிற்சிகள் போன்றவற்றிலும் உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்கும் ஆதரவு வழங்கப்படுகிறது.

இது தவிர, எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கு ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ்யோஜனா ரஃப்தார் ஏற்பாடு செய்கிறது. இதன் கீழ், மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான அனுமதிக் குழுவின் ஒப்புதலுடன், எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் குறித்த திட்டத்தை மாநிலங்களும் செயல்படுத்தலாம்.

2019-20-ம் ஆண்டில் 33.22 மில்லியன் டன் ஆக இருந்த எண்ணெய் வித்துகளின் உற்பத்தி, 2020-21-ம் ஆண்டில் 35.96 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது.

2019-20-ம் ஆண்டில் 23.03 மில்லியன் டன் ஆக இருந்த பருப்பு வகைகளின் உற்பத்தி, 2020-21-ம் ஆண்டில் 25.46 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் எண்ணெய் வித்துகளுக்கு ரூ 213.70 கோடியும், பருப்பு வகைகளுக்கு ரூ 864.95 கோடியும் வெளியிடப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் எண்ணெய் வித்துகளுக்கு ரூ 317.01 கோடியும், பருப்பு வகைகளுக்கு ரூ 639.44 கோடியும் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810919

***************



(Release ID: 1811022) Visitor Counter : 192


Read this release in: Urdu , English