சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நியாயமான விசாரணையை உறுதிப்படுத்த ஆன்லைன் நீதிமன்றங்கள்: தமிழகம் தொடர்பான விவரங்கள்
Posted On:
21 MAR 2022 2:49PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.
கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், நீதிமன்றத்துக்கும் சிறைகளுக்கும் இடையில் கைதிகளின் போக்குவரத்தை குறைப்பதற்காக ரிமாண்ட் தொடர்பான விஷயங்களுக்கு பெரும்பாலான நீதிமன்றங்களில் காணொலி விசாரணை முறை பயன்படுத்தப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகளின் காணொலி விரிவாக்கத்திற்கு இந்த அனுபவம் உதவியது. காணொலி விசாரணை முறையில் சீரான தன்மையையும் தரநிலையையும் கொண்டு வர, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஒரு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 6 ஏப்ரல் 2020 அன்று காணொலி முறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் வழங்கியது.
மேலும், காணொலி நடத்தை விதிகள், 5 நீதிபதிகள் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டன, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அவை அனுப்பப்பட்டன. 23 உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே இந்த மாதிரி விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. கொவிட் ஊரடங்கு காலத்தில் நீதிமன்றங்களின் முக்கிய அம்சமாக காணொலி திகழ்ந்தது.
பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்து, மாவட்ட நீதிமன்றங்கள் 1,11,40,223 வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் 60,21,688 வழக்குகளை (மொத்தம் 1.71 கோடி) 31.01.2022 வரை காணொலி மூலம் விசாரித்தன. ஊரடங்கு தொடங்கியதில் இருந்து 08.01.2022 வரை 1,81,909 விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நடத்தியது.
நீதிமன்றங்களின் காணொலி உள்கட்டமைப்பை அதிகரிக்க, தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் தலா ஒரு காணொலி கருவி வழங்கப்பட்டுள்ளதோடு, கூடுதலாக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு முறையில் வழக்கு தாக்கல் குறித்த, வழக்கறிஞர்களுக்கான வலையரங்குகள் தமிழகம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் தில்லி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்டன. மேலும், தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளில் மின்-நீதிமன்ற சேவைகளுக்கான செயலியின் பயனர் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807613
***********************
(Release ID: 1807779)
Visitor Counter : 214