வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

'குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்களுக்கான' தேசிய மாநாடு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பங்கேற்பு, திருச்சி பெண்கள் குழுவின் பணிகள் குறித்து விளக்கப்படும்

Posted On: 01 MAR 2022 4:14PM by PIB Chennai

'குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்: கழிவு மேலாண்மையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்' என்ற தேசிய மாநாட்டை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 நடத்தவுள்ளது.

சத்தீஸ்கர் அரசுடன் இணைந்து 3 மார்ச் 2022 அன்று ராய்ப்பூரில் இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. சத்தீஸ்கர் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், ராய்ப்பூர் மாநகராட்சி மேயர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் சத்தீஸ்கர் தலைமைச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்வேறு மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கற்றலுக்கான ஒரு தளமாக நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வு உதவும்.

தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0-ன் கீழ் "குப்பை இல்லாத நகரங்களுக்கான தேசிய திறன் மேம்பாட்டு கட்டமைப்பு" இந்நிகழ்வில் வெளியிடப்படும், நாட்டில் நகர்ப்புற சுகாதாரத் துறையை வலுப்படுத்த தொடர்புடைய பங்குதாரர்களின் திறன்களை உருவாக்க இது உதவும்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து, ஜம்மு & காஷ்மீர், சண்டிகர் மற்றும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற முக்கிய மாநிலங்கள் உட்பட கிட்டத்தட்ட 17 மாநிலங்கள் மற்றும் அவற்றின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான முன்முயற்சிகள் குறித்து மாநாட்டில் விளக்கப்படும். திருச்சிராப்பள்ளியில் இயங்கும் "ஷீ டீம்கள்" என்று அழைக்கப்படும் பெண்கள் தலைமையிலான சுயஉதவி குழுக்கள், குடிசைப்பகுதிகளில் சமூக கழிப்பறைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும், குடிசை சமூகங்களில் ஆரோக்கியமான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் தொழில் முனைவோர் முயற்சிகளை நிறுவியுள்ளன. இக்குழுக்களின் பணி குறித்து மாநாட்டில் விளக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802098

                           **********************

 



(Release ID: 1802179) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Hindi