சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை

Posted On: 01 MAR 2022 3:34PM by PIB Chennai

இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 28-ந் தேதி முதல் மார்ச் 4-ந் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

 சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகர் தலைமை அஞ்சல் நிலையம், மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் 22 துணை அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திர விற்பனை நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு  மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.

 ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5109 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.  5 ஆண்டுகள் முடிந்தவுடன் முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.  8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணம் கிடைக்கும்.

 இதற்கு விண்ணப்பிக்க நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு) அவசியமாகும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகி்யவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் நிலையத்தில் கொடுத்து தங்கப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

****


(Release ID: 1802083) Visitor Counter : 506
Read this release in: English