பாதுகாப்பு அமைச்சகம்

குஜராத் காந்தி நகரில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பாதுகாப்புக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள்: மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted On: 28 FEB 2022 4:52PM by PIB Chennai

குஜராத் காந்தி நகரில் நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு க்  கண்காட்சி-2022க்கான ஏற்பாடுகளை, பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.  இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான கருவிகள் இடம் பெறுகின்றன. கோவிட்-19 தொற்று குறைந்து வருவதால், சுதகாதாரத்துக்கான நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி  10ம் தேதி தளர்த்தியது. அப்போது முதல் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

கடந்த 1999ம் ஆண்டு பாதுகாப்புக்  கண்காட்சி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போதைய கண்காட்சி இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரியது. கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு பாதுகாப்பு கண்காட்சி நடைபெறுமா இல்லலையா என்ற நிச்சயமற்ற தன்மை இருந்தபோதும்பாதுகாப்புத்  தளவாட  உள்நாட்டு உற்பத்தித்  திட்டங்கள் ஒத்தி வைக்கப்படவில்லை.  பாதுகாப்புக்  கண்காட்சி - 2022 நடத்தவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முடிவெடுத்தது.

பாதுகாப்புக்  கண்காட்சி-2022, இந்தியாவின் பெருமைக்கான பாதையை எதிரொலிக்கவுள்ளது.  பாதுகாப்புக்  கண்காட்சியை, அனைத்து தரப்பினரையும் உள்ளடங்கியதாக மாற்ற, இது நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடத்தப்படுகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் தாமதங்களால் இந்தக்  கண்காட்சியில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிறுவனங்கள் காணொலி மூலம் பங்கேற்கலாம்.  கண்காட்சியில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள், காணொலிமூலம் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

பாதுகாப்பு கண்காட்சி, 3 இடங்களில் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடந்தத்  திட்டமிடப்பட்டு வருகிறது. ஹெலிபேட் கண்காட்சி மையத்தில் கண்காட்சியும், மகாத்மா மந்திர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மையத்தில் நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும், சபர்மதி ஆற்றங்கரையில் நேரடி செய்முறை விளக்கமும் நடத்தப்படவுள்ளன. 

இந்தியாவில் சுகாதார நெறிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பது, பாதுகாப்புக்  கண்காட்சி -2022-ல் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் 78 நாடுகள் பங்கேற்பதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக 39 அமைச்சர்கள் அடங்கிய  குழுவினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வரவேற்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட பாதுகாப்புக்  கண்காட்சி-2022-க்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளதால், பாதுகாப்புத்துறை  வர்த்தகத்தின் நலனுக்காக பாதுகாப்புத்  துறை அமைச்சகத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இந்தக்  கண்காட்சி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளூர் மாணவர்களுக்கு பலன் அளிக்கும் எனவும், அவர்களுக்கு பிரத்தியேக  வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 2022 மார்ச் 14ம் தேதி நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியில், இளம் தொழில்முனைவோர், குஜராத்தின் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் இருக்கும்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில், உலகளாவிய நடவடிக்கையை மேற்கொண்டு, வர்த்தக நலன்களை மேலும் அதிகரிக்கும் இந்தியாவின் தீர்மானத்தின் அடையாளமாக பாதுகாப்புக்  கண்காட்சி - 2022 உள்ளது. பாதுகாப்புக்  கண்காட்சிக்கான தயார் நிலை மற்றும் முயற்சிகளை ஆய்வு செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புக்  கண்காட்சி-2022 பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், ராணுவத்   தளபதி ஜெனரல் மனோஜ் முகந்த் நரவானே, டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்தி குறிப்பைக்  காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801825

                           ************************

 



(Release ID: 1801863) Visitor Counter : 167