பாதுகாப்பு அமைச்சகம்
போர்க் கப்பல்களை குடியரசுத் தலைவர் பார்வையிடும் நிகழ்ச்சியில், உள்நாட்டு தயாரிப்புகளை வெளிக்காட்டியது இந்திய கடற்படை
Posted On:
21 FEB 2022 6:15PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை, குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவத்தை முன்னிட்டு, கடற்படையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 75 ஆண்டு சேவையில் இந்திய கடற்படை என்ற கருப்பொருளில், இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட போர்கப்பல்களை இந்திய கடற்படை இந்நிகழ்ச்சியில் வெளிக்காட்டியது.
21 குண்டுகள் முழங்க கடற்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டபின், ஐஎன்எஸ் சுமித்ரா என்ற கப்பலில் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஏறினார். இதனால் இது இன்று குடியரசுத் தலைவர் பயணம் செய்யும் கப்பல் என அழைக்கப்பட்டது. கடற்படை அணிவகுப்பை பார்வையிட வந்த குடியரசுத் தலைவரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் ஆகியோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் பயணம் செய்த கப்பல், நான்கு வரிசைகளில் அணிவகுத்து நின்ற 44 கப்பல்களை கடந்து சென்றது. . இதன் மூலம் இந்திய கடற்படை சக்தி முழு அளவில் வெளிக்காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை அதிவேகத்தில், குடியரசுத் தலைவரின் கப்பல் அருகே கடந்து செல்லும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. கடற்படையினரின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த நிகழ்ச்சிகளும் செய்து காட்டப்பட்டன. கடற்படையின் ஹாக் ரக போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் பாராசூட்டிலிருந்து குதித்தது போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
குடியரசுத் தலைவர் பயணம் செய்த கப்பல், போர்கப்பல்களின் அணிவகுப்பை, கடந்து சென்றபோது, அந்த கப்பல்களில் இருந்த கடற்படை அதிகாரிகள், மாலுமிகள் பாரம்பரிய முறைப்படி அணிவகுத்து நின்று சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
கடற்படையின் சேத்தக், ஷீ கிங், காமோவ் ரக ஹெலிகாப்டர்கள், டார்னியர், ஐஎல்-38எஸ்டி, பி81, ஹாக்ஸ் மற்றும் மிக்29-கே ரக விமானங்களின் அணிவகுப்பையும், குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், இந்திய கடற்படையின் தொடர்ச்சியான கண்காணிப்பு, துரித நடவடிக்கை, அயராத முயற்சிகள், நாட்டின் கடற் பாதுகாப்பு மற்றும் வர்த்தக பாதுகாப்பை உறுதி செய்வதில் வெற்றிகரமாக உள்ளன என தெரிவித்தார். மேக் இன் இந்தியா நடவடிக்கையில் இந்திய கடற்படை முன்னணியில் இருந்து உள்நாட்டு கொள்முதலை அதிகம் மேற்கொள்வது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் சுமார் 70 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை என்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியா , அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கியது பெருமையான விஷயம் என்று கூறிய குடியரசுத் தலைவர், விரைவில் உள்நாட்டு தயாரிப்பு விமானம் தாங்கி போர்கப்பல் ‘விக்ராந்த்’ கடற்படையில் இணைய போகிறது என கூறினார். உள்நாட்டு கப்பல் கட்டும் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தற்சார்பு இந்தியா திட்டத்தில் மிகச் சிறந்த பங்களிப்பு என கூறினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு தபால் உறை மற்றும் தபால் தலையை, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் திரு. தேவ்சின்ஹ் ஜே சவுகான் ஆகியோர் முன்னிலையில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார்.
******************
(Release ID: 1800133)
Visitor Counter : 355