வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ரத்தினங்கள் & நகைத் தொழில் இந்த ஆண்டு 40 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
18 FEB 2022 3:42PM by PIB Chennai
ரத்தினங்கள் & நகைத் தொழில், இந்த ஆண்டு 40 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த தொழில்துறை கோவிட்டுக்கு முந்தைய அளவான 6.5% வளர்ச்சியை அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சர்வதேச நகைக் கண்காட்சி-2022 தொடக்க விழாவில், திரு கோயல் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
ரத்தினங்கள் & நகைத் தொழில் இந்திய பொருளாதாரத்தின் வலுவான தூணாக திகழ்கிறது என்று திரு கோயல் தெரிவித்தார்.
“நமது தங்கம் மற்றும் வைர வர்த்தகம், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களிப்பையும், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி வரை 32 பில்லியன் டாலர் ஏற்றுமதியாகி உள்ளது” என்றும் திரு கோயல் தமது உரையில் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழிலில் தற்சார்பு அடைய இந்தியா விரும்புவதாக குறிப்பிட்ட திரு கோயல், எனவே, இந்த தொழில்துறையை ஏற்றுமதி ஊக்குவிப்பில் கவனம் செலுத்த வேண்டிய துறையாக அரசு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழிலின் வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவில் இந்தியா இத்தொழிலில் தடம் பதிக்க ஏதுவாக 2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் திரு கோயல் சுட்டிக்காட்டினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799277
***************
(Release ID: 1799294)
Visitor Counter : 219