குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சென்னையில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக் கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
14 FEB 2022 1:48PM by PIB Chennai
சகோதர, சகோதரிகளே,
சென்னையில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக்கழகத்திற்கு (என்ஐடிடிடிஆர்) வருகை தந்திருப்பதற்கும், உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதற்கும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நமது கல்வி வரைபடத்தில் என்ஐடிடிடிஆர் தனித்துவ நிலையைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனம் ஆசிரியர்களுக்கு குறிப்பாக தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிக்க நிறுவப்பட்டதாகும். நமது கலாச்சாரத்தில் குரு என்பவர் தனித்த இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும்
குரு பிரம்ம
குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர
குரு சாக்சாத் பரம் பிரம்ம
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
என்று பெருமிதத்துடன் மிகவும் பொருத்தமாக சித்தரிக்கப்பட்டுள்ள வரிகளில் ஆசிரியருக்கான வழிபாடு இருப்பதும் நீங்கள் அனைவரும் அறிந்ததாகும்.
இந்தக் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்கள் குருக்களுக்கும்- பயிற்சி பெறுவோருக்கும் குருக்களாக இருப்பவர்கள். எனவே இவர்கள் “இருமுறை வழிபாட்டுக்கு” உரியவர்கள். இவர்கள் தாங்களே குருக்களாக இருந்துகொண்டு மற்ற மதிப்புமிகு குருக்களிடம் கற்றுக்கொள்கிறார்கள்.
தொழில்நுட்ப ஆசிரி்யர்களின் பயிற்சிக்கான தேசிய முன்முயற்சி கல்வி அமைச்சகத்தின் முக்கிய திட்டமாகும். இதனை சென்னை என்ஐடிடிடிஆர் தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் நிறுவனமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எட்டு வகையான பயிற்சி முறைகளில் 60,000-க்கும் அதிகமானோர் கற்றலுக்காக பதிவு செய்து கொண்டுள்ளனர் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
ஒரு தேசத்தின் அறிவு சார் வாழ்க்கை முறையை ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள் என்பதும் அதன் வளர்ச்சியை வகைப்படுத்துவதில் முக்கியமான பங்களிக்கிறார்கள் என்பதும் நீங்கள் அனைவரும் அறிந்ததாகும். ஆசிரியர்கள் அறிவுசார் சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். கற்பவர்களாகவும், அறிவை வளர்ப்பவர்களாகவும் இருக்கும் ஆசிரியர்கள் நமக்குத் தேவை. ஆசிரியர்கள் என்பவர்கள் வாழ்க்கையோடு பிணைந்து மனிதகுலத்தின் நிலைமையை மேம்படுத்த உதவுகிறார்கள். நமது வகுப்பறைகளில் குறிப்பாக ஊரக இந்தியாவில் ஊக்கப்படுத்துகின்ற, மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தலைவர்கள் நமக்குத் தேவை. சிறந்த ஆசிரியர்கள் கல்விச்சூழலை மறுஉருவாக்கம் செய்கிறார்கள். மேலும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கிறார்கள். தொழில்நுட்ப ஆசிரியர்கள் என்ற முறையில் அதிவேக வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ஊக்கத்தை நீங்கள் தரவேண்டும்.
இந்தச் சூழலில் தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆவணம். இது எதிர்காலத்திற்கான வரைப்படத்தைக் கொண்டுள்ளது. நமது நாட்டின் கல்விச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த அது வகைசெய்கிறது. இளம் கல்விப்புல உறுப்பினர்களை உற்சாகப்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும் முக்கியமானதாக அது கோடிட்டுக் காட்டுகிறது. ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டமைப்புக்குள், கல்விப்புல உறுப்பினர்கள், அவர்களுக்கான துறை மற்றும் பயிற்றுவிக்கும் உத்திகளுக்குத் தேவைப்படும் திறன்களைப் பெறுவதற்கு அப்பால், புதிய கண்டுபிடிப்பையும் அது வலியுறுத்துகிறது. ஆசிரியர்கள் புதுவகையான உத்திகளைக் கையாள வேண்டும். மேலும் அறிவுபூர்வமான, துடிப்புமிக்க, ஒருங்கிணைந்த சூழலில் தேசிய மற்றும் உலகளாவிய சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் அவர்களின் தொலைநோக்குப் பார்வை தீர்வுகாண வேண்டும். புதிய கண்டுபிடிப்பு செயல்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும். கள அளவில் மாற்றத்திற்கான தாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் இந்தக் கல்வி நிறுவனம் பல்வேறு பயிற்சித் திட்டங்களை நடத்துவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்புத் திறன்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்துவதில் உறுதிமிக்க ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
வெளியுறவு அமைச்சகத்தின் இந்தியத் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் படி தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு என்ஐடிடிடிஆர் சென்னை பயிற்சி வழங்குவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. 107 நாடுகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பங்கேற்பாளர்கள் இருப்பதற்காக இந்தக் கல்வி நிறுவனத்தை நான் பாராட்ட வேண்டும். இந்தத் துறையின் விஸ்வகுரு என்ற பெருமையை உண்மையில் இது பெற்றிருக்கிறது.
அன்புள்ள சகோதர, சகோதரிகளே,
மாணவர்களுக்கு அனுபவத்தின் மூலமாகக் கற்பித்தல் முக்கியமானது. அனுபவத்தின் மூலமான கற்றல், படைப்பூக்கத்திற்கும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவும் உதவி செய்கிறது. கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்களையும், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கும் தேவையை தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. சிறப்புடன் கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் மூலம் தலைசிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதில் என்ஐடிடிடிஆர் சென்னை முன்னணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கோட்பாட்டளவில் கற்பித்தல் என்பது ஒருவழி முறையில் தகவலைத் தெரிவிப்பது என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் உள்ளடக்கம் என்பதிலிருந்து சூழல் என்பதுடன் இணைப்பதற்குத் தேவையான செயல்களில் இருவழி முறையாக அது கட்டமைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பெருந்தொற்று என்பது உலகளவில் கல்வியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உலகவங்கி, யுனெஸ்கோ, யுனிசெஃப் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தற்போதைய மதிப்பில் இந்தத் தலைமுறை மாணவர்கள் வாழ்நாள் வருவாயில் 17 டிரில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு அல்லது உலகளாவிய தற்போதைய ஜிடிபி-ன் 14 சதவீத இழப்பு என்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடலால் சிறுமிகள், ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள், கிராமப்பகுதிகளில் வாழ்கின்றவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், இனச்சிறுபான்மையினர் ஆகியோர் தங்களின் சகாக்களை விட அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
டிஜிட்டல் முறையில் கற்றலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில் டிஜிட்டல் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். இதனை அடைவதற்கு இணையதள வசதி கிடைப்பதை அதிகரிப்பது குறிப்பாக ஊரகப்பகுதிகளிலும், தொலைத்தூரப்பகுதிகளிலும் அதிகரிப்பது அவசியமாகும். ஏராளமான பிரிவுகளையும், சமத்துவமில்லாத படிநிலைகளையும் கொண்டுள்ள நம்முடையது போன்ற ஒருநாட்டில் கல்வி அனுபவத்தில் அனைவரையும் உள்ளடக்குவது இதயப்பகுதியாக இருக்க வேண்டும். உள்ளடக்கு, ஈடுபடுத்து, அறிவூட்டு, அதிகாரம் அளி- என்பது மந்திரமாக இருக்க வேண்டும்.
தேவையான வசதிகளை உருவாக்குவதோடு, மின்னணு கற்றலில் (e-learning) ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த வேண்டியதும் அவசியம். இதில், அவர்களை (ஆசிரியர்களை) உள்ளூர் மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் விதமாக தொழில்நுட்ப திறன் வாய்ந்தவர்களாக மேம்படுத்துவதற்கு இந்த நிறுவனத்தைப் போன்ற அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
அந்த வகையில், என்.ஐ.டி.டி.டி.ஆர் திறந்தவெளி கல்வி ஆதார மையத்தை ஏற்கனவே திறந்து வைத்ததில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திறந்தவெளி கல்வி ஆதார மையம், ஆசிரியர்களின் அறிவாற்றல் திறன் மற்றும் கற்பித்தல் முறையை மேம்படுத்த தேவையான உயர்தர கற்பித்தல் வளங்களை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திறந்தவெளி கல்வி மூலம் உள்ளார்ந்த தன்மையை மேம்படுத்துவதில் இதுவொரு முக்கியமான நடவடிக்கையாகும். அவருக்கு ஆதரவாக செயல்படும் குழுவினரை நான் பாராட்டுவதோடு, என்.ஐ.டி.டி.டி.ஆர் தனது கற்பித்தல் உபகரணங்களை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்வதுடன், கற்போரின் பங்களிப்பைக் கொண்டதாக ஊக்குவிக்க வேண்டும்.
கோவிட் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு தங்களால் இயன்ற அளவுக்கு பணியாற்றியதற்காகவும் ஆசிரியர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். கண்டுபிடிப்புகளின் தாயாக திகழ்வது தற்போதைய தேவை. அந்த வகையில், கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான கட்டாயத் தேவையை பெருந்தொற்று பாதிப்பு உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக, கற்பித்தல்-கற்றல் சூழலில் புரட்சி ஏற்படுத்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் கலப்பு முறையை (ஆன்லைன்-நேரடி கற்பித்தல்) பின்பற்றுகின்றன. கற்போரின் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுவதற்கான தங்களது உத்திகள் மற்றும் நடைமுறைகளில் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு விட்டுக்கொடுக்கும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐஐஐடி, ஐஐஐடிடிஎம் (23 நிறுவனங்கள்) தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி, என்ஐடி பாட்னா மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சித் திட்டம் ஒன்றை என்.ஐ.டி.டி.டி.ஆர் உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மட்டுமின்றி, புதுதில்லி வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி (சப்தர்ஜங் மருத்துவமனை) மருத்துவர்களுக்கும் இந்த நிறுவனம் பயிற்சி அளித்துள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். ஐடிஇசி-யின் நல்லெண்ண உதவியாக, மாலத்தீவைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்களுக்கு இந்த நிறுவனம் சிறப்பு பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கத்தக்கது.
பகிர்ந்து கொள்-கவனித்துக் கொள் என்ற தத்துவம் இந்திய கலாச்சாரத்தின் மையப்புள்ளி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் நாம் எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவோமேயானால், நாம் அடையக்கூடிய மகிழ்ச்சி எல்லையற்றதாக இருப்பதோடு எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வி எளிதில் கிடைப்பது, பங்களிப்பு மற்றும் தரத்தை உறுதிசெய்ய நாட்டில் ஆன்லைன் கல்வி முறையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஸ்வயம் (SWAYAM)-ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, இந்த நிறுவனத்தின் மகுடத்தில் மேலும் ஒரு சிறப்பாக அமைவதோடு, மிகுந்த பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே,
தொழில்நுட்ப பாடங்களுக்கான மும்மொழி (ஆங்கிலம்-தமிழ்-ஹிந்தி) அகராதி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் என்.ஐ.டி.டி.டி.ஆர் சென்னை ஈடுபட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கற்றல் அமைப்பாகும். தொடக்கப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி வரையிலாவது தாய்மொழியில் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை நான் அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன். இது என்னுடைய ஆழமான கருத்து என்பதோடு பல்வேறு ஆராய்ச்சிகளும் தாய்மொழியில் கற்பது நல்ல பயனை அளிக்கும் என தெரிவித்துள்ளன.
கற்பிக்கும் சூழல், கற்பிக்கப்படும் பொருளை உட்கிரகிப்பதில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். முழுமையான கற்றல் மற்றும் தனிநபர் வளர்ச்சியை மேம்படுத்த, தூய்மை, பசுமைமயமாக்கல் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தில் உள்ள கற்றல் இடைவெளியை அகற்றவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில், இன்று விளையாட்டு வளாகத்தை திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். படிப்பை தொடரும் அதேவேளையில் உடல் தகுதியையும் பராமரிக்க வேண்டும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். நீங்கள் உடல் ரீதியாக தகுதி வாய்ந்தவராக இருந்தால், மனரீதியாக விழிப்புடன் இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதாகவும் இருப்பதற்கு உடற்தகுதி அவசியம் என்பதை பெருந்தொற்று பாதிப்பு மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. மாணவர்கள் விளையாட்டு அல்லது யோகா பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு மாணவர்களை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
சகோதரிகளே, சகோதரர்களே,
ஆசிரியர்கள்தான் இந்திய சமுதாயத்தின் மையப்புள்ளியாக திகழ்கின்றனர். உயர்ந்தபட்ச மனித பாரம்பரியத்தில், ஆசிரியர்கள் புனிதமானவர்களாக போற்றப்படுகின்றனர். இந்த சித்தாந்தத்திற்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய உறுதிப்பாட்டிற்கு ஏற்ப பணியாற்ற வேண்டும்.
எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக, மகான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்துள்ள அறிவார்ந்த கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
ஒரு மனிதன் தாம் கற்க வேண்டியதை முழுமையாக கற்றறிவதோடு, தாம் கற்றதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
நிறைவாக, மதிப்புமிக்க இந்த நிறுவனத்தை உலகத் தரத்திற்கு கொண்டு செல்ல உறுதிபூண்டுள்ள என்.ஐ.டி.டி.டி.ஆர் சென்னை நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி,
ஜெய் ஹிந்த்!
----------------------
(Release ID: 1798251)
Visitor Counter : 334