ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இந்தியாவின் கிராமப்புறங்களில் தொழில்முனைவோர் கலாச்சாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2022 5:12PM by PIB Chennai
கிராமப்புற அளவில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக தீன் தயாள் அந்த்யோதயா திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராமப்புற தொழில்முனைவோருக்கான ஸ்டார்ட் அப் திட்டம் (SVEP) செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் திரு ஃபக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், கிராமப்புறங்களில் வேளாண் அல்லாத புதிய தொழில்களைத் தொடங்க கிராமப்புற ஏழைகளுக்கு உதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ஒரு வட்டாரத்தில் 2,400 புதிய தொழில்களுக்கு ரூ.597.76 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதுடன் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் உதவி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் இதன் மூலம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 576 தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் பிரதமரின் இளையோர் (முன்னோடி) திட்டம் மூலம் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796885
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1796983)
வருகையாளர் எண்ணிக்கை : 348