தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அமைப்புசாரா தொழிலாளர் சங்கங்களின் தேசிய அளவிலான நிர்வாகிகளுடன் திரு பூபேந்தர் யாதவ் கலந்துரையாடல்

Posted On: 19 JAN 2022 6:38PM by PIB Chennai

இதுவரை  இல்லாத வகையில் ஒரு தனித்துவமான முயற்சியாக, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்னைகள்  குறித்து, அமைப்புசாரா தொழிலாளர்  சங்கங்களின் தேசிய அளவிலான நிர்வாகிகளுடன் இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுவேலைப் பணியாளர்கள், ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், ரயில்வே கிடங்கு பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது தொழிலாளர் நல அமைச்சகத்தின் இ-ஷ்ரம் இணையதளத்திற்கு பாராட்டுத் தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த இணையதளம் தொழிலாளர்களுக்கு அடையாளத்தை மட்டுமின்றி கண்ணியத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன் அவர்களது பாதிப்புகளைக் களையவும் உதவிகரமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பேசுகையில், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு உண்மையான அக்கறையுடன் அயராது பாடுபட்டு வருவதாக கூறினார்.  இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்கு, தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 21 கண்காணிப்பு மையங்களுக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  இந்த மையங்களின் செயல்பாடு அமைச்சகத்தால் தினசரி கண்காணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

200 நாட்களுக்குள் சுமார் 23 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள்   இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்திருப்பதற்கும் அவர் தமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் செங்கல் சூளை, வனம் சார்ந்த தொழில்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791040

 

***************

 



(Release ID: 1791062) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Hindi