கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் கடல்சார் பணிமனையை திரு சோனாவால் தொடங்கி வைத்தார்

Posted On: 24 DEC 2021 1:39PM by PIB Chennai

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகத்தில், புதிததாக அமைக்கப்பட்டுள்ள கடல்சார் பணிமனையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் நேற்று திறந்து வைத்தார். மேலும் கடல்சார் பல்கலைக்கழக விசாகப்பட்டினம் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாணவர்கள் உழைப்பின் 100 சதவீதத்தை வழங்கினால் மட்டுமே வெற்றிக்கான வழி பிறக்கும். ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு, நேரம் தவறாமை, இலக்கை நோக்கிய பயணம் போன்ற குணங்களால் மட்டுமே வெற்றியை நோக்கிய பயணம் சிறப்பானதாக அமையும்’ என்றார். “மாணவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தைப் பிரகடனம் செய்துள்ள ஆற்றல்மிக்க தலைவரை பிரதமராக நமக்கு பாரத மாதா தந்திருக்கிறாள்” என்றும் அமைச்சர் சோனாவால் தெரிவித்தார்.

 சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தரமான கடல்சார் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சிக்கான 7 கல்வி நிறுவனங்களை இணைத்து மத்திய பல்கலைக்கழகமாக 2008-ல் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை, நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு வளாகங்களில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட 18 கடல்சார் பயிற்சி கல்வி நிறுவனங்களும் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி. ரவீந்திரநாத் (தேனீ), சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், பல்கலைக்கழக வேந்தர் திரு சங்கர் ஐஏஎஸ் (ஓய்வு), பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி சங்கர், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு சுனில் பாலிவால் உள்ளிட்டோர்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

                                                                 ***
 



(Release ID: 1784896) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi , Punjabi