ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், 2021-22-ல் ராஜஸ்தானுக்கு ரூ.10,180 கோடி மத்திய நிதி ஒதுக்கீடு.
Posted On:
19 DEC 2021 4:21PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ராஜஸ்தானின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
2024-ம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய அரசு முழு ஆதரவை வழங்குகிறது. ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை இல்லை.
இலக்கை அடைவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு உதவ, 2021-22-ம் ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்திற்காக ரூ. 10,180 கோடி மத்திய ஒதுக்கீட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஒப்புதல் அளித்தார். 2020-21ல் ஒதுக்கப்பட்ட ரூ 2,522 கோடியுடன் ஒப்பிடும் போது இது நான்கு மடங்கு உயர்வு ஆகும்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் மற்றும் இடையூறுகள் இருந்தபோதிலும், கடந்த 27 மாதங்களில், நாட்டில் 5.44 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, 8.67 கோடிக்கும் அதிகமான (45.15%) கிராமப்புறக் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் நீர் விநியோகத்தைக் கொண்டுள்ளன.
பிரதமரால் ஜல் ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட 15 ஆகஸ்ட் 2019 நிலவரப்படி,ர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 1.01 கோடி கிராமப்புற குடும்பங்களில், 11.74 லட்சம் (11.5%) குடும்பங்கள் குழாய் நீர் விநியோகத்தைக் கொண்டிருந்தன.
பணி தொடங்கப்பட்டதில் இருந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் 9.65 லட்சம் வீடுகளுக்கு (9.5%) குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று, மாநிலத்தில் 21.39 (21.1%) லட்சம் கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் நீர் விநியோகத்தைப் பெறுகின்றன.
இத்திட்டத்தின் காரணமாக ராஜஸ்தானில் குடிநீர் விநியோகத்தின் நிலை படிப்படியாக மாறி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில், சுமார் 30 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783228
**************
(Release ID: 1783241)
Visitor Counter : 208