பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர் டிஓ தயாரிப்புக்களை பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
14 DEC 2021 5:51PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த 5 பொருட்களை,பாதுகாப்பு படைகள் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகளிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வழங்கினார். அதோடு, 7 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களையும் அவர் ஒப்படைத்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, டிஆர் டிஓ தயாரிப்புகளை பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, தில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் இன்று நடத்தப்பட்டது.
டிஆர்டிஓ தயாரித்த ட்ரோன் எதிர்ப்பு கருவி, மாடுலர் பிரிட்ஜ், வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஸமார்ட் வெடிகுண்டு, வெடிமருந்து வகைகள், எடை குறைவான தீயணைப்பு உடை ஆகியவற்றை பாதுகாப்பு படைகள் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
மாடுலர் பிரிட்ஜ்-ஐ ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானேவிடம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஸ்மார்ட் வெடிகுண்டை விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரியிடம், மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்.
நவீன சாப் வெடிமருந்து பொருட்களை கடற்படை தளபதி ஆர் ஹரி குமாரிடம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார். டிஆர்டிஓ தயாரித்த தீயணைப்பு உடை மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் திரு வி.எஸ்.கே. கவுமுதியிடம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
அதோடு டிஆர்டிஓ உருவாக்கிய கடலோர கண்காணிப்பு ரேடார், தானியங்கி ரசாயன கண்டுபிடிப்பு மற்றும் எச்சரிக்கை கருவி,ரசாயன கண்காணிப்பு சாதனம், யூனிட் பராமரிப்பு வாகனம், பழுது பார்க்கும் வாகனம், சிலிகா அடிப்படையிலான செராமிக் தொழில்நுட்பம், தீயணைப்பு, ஜெல் ஆகியவற்றின் தொழில்நுட்ப பரிமாற்ற ஆவணங்களும் இந்நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781416
****************
(Release ID: 1781513)
Visitor Counter : 228