மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் டிஜிட்டல் மகோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு’ கண்காட்சியில் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாடினார்

Posted On: 30 NOV 2021 7:21PM by PIB Chennai

விடுதலையின் டிஜிட்டல் மகோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு’ திட்டத்தின் கீழ் நிலைத்தன்மை மிக்க செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களை உருவாக்கி தங்களது திறமையை நிரூபித்த இந்தியா முழுவதுமுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த படைப்பாளிகளுடன் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாடினார்.

இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு’ என்பது அரசு பள்ளிகளுக்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், தேசிய மின்-ஆளுகை பிரிவு மற்றும் இன்டெல் இந்தியாவால் 2020 மே மாதம் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமாகும். இதில் 20 சிறந்த திட்டங்களை உருவாக்கியவர்களோடு இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாடினார்.

மாணவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், திறமையான எதிர்கால பணியாளர்களின் ஒரு பகுதியாக அவர்களை மாறுவதற்கும் இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டது, நாடு முழுவதும் உள்ள 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த பிரத்யேக திட்டம் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது.

நாட்டின் முன்னணி தொழில்நுட்ப வல்லுனர்களில் ஒருவராகவும் விளங்கும் திரு ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குழந்தைகள் பாடப்புத்தகங்களிலிருந்து அறிவைப் பெற நினைக்கும் நேரத்தில், கல்வி முறையில் இது ஒரு தெளிவான மறுமலர்ச்சி ஆகும். 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் இளைஞர்கள், உயர் தரத்தில் புதுமைகளை உருவாக்குகிறார்கள். இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொழில்நுட்பத் துறையில் இருப்பவன் என்ற முறையில், இந்த குழந்தைகளின் உத்வேகமான பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார்.

முன்னாள் சிப் வடிவமைப்பாளரும், சிலிக்கான் பள்ளத்தாக்கில் பென்டியம் ப்ராசஸரை வடிவமைத்த குழுவில் அங்கம் வகித்தவருமான அமைச்சர், இந்தியாவில் மொபைல் தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1776569

**********


(Release ID: 1776611) Visitor Counter : 250
Read this release in: English , Hindi