பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
29 NOV 2021 3:05PM by PIB Chennai
தமிழகத்தை சேர்ந்த திரு திருச்சி சிவா உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.
பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதோடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆயுதத் தொழிற்சாலைகளில் நிதி சுயாட்சி, செயல்திறன், புதுமைகள் மற்றும் வளர்ச்சி திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 41 ஆயுதத் தொழிற்சாலைகளை ஏழு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக அரசு மாற்றியுள்ளது. இவை 100% அரசிற்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனங்களாகும்.
இந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் மார்க்கெட்டிங் அலுவலகங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன .பயனர் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் தயாரிப்புகளை உருவாக்க இந்நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பங்குதாரர்களுடன் இணைந்து ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, லக்னோ மற்றும் கான்பூர் ஆகிய ஆறு முனைகளை உள்ளடக்கிய உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் 2018 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி சூழலியலை உருவாக்கி, முதலீடுகளை ஈர்ப்பதும் எளிதாக்குவதும் இதன் நோக்கங்கள் ஆகும்.
தனியார் நிறுவனமான பிடிசி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இந்த வழித்தடத்தின் லக்னோ முனையில் விமானவியல் துறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களை தயாரிப்பதற்காக ஏரோலோய் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற புதிய ஆலையை அமைத்துள்ளது. இந்த வசதியை நவம்பர் 13, 2021 அன்று பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்.
பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு காவேரி இஞ்சின் திட்டத்திற்கு 1989-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. பல்வேறு பிரிவுகளில் அதிக தொழில்நுட்ப தயார்நிலையை இத்திட்டம் எட்டியுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ 2105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 2053.56 கோடி செலவிடப்பட்டு, ரூ 2097.65 கோடி உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆயுதத் தொழிற்சாலைகளில் நிதி சுயாட்சி, செயல்திறன், புதுமைகள் மற்றும் வளர்ச்சி திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 41 ஆயுதத் தொழிற்சாலைகளை ஏழு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களாக அரசு மாற்றியுள்ள நிலையில், அவற்றின் பணியாளர்கள் நலன்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போதுள்ள ஊழியர்களின் ஓய்வூதிய கடமைகள் அரசால் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
பாதுகாப்பு துறைக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2019-20-ம் ஆண்டு ரூ 4,72,069.78 கோடியாகவும், 2020-21-ம் ஆண்டு ரூ 5,14,796.69 கோடியாகவும், 2021-22-ம் ஆண்டு ரூ 5,20,794.99 கோடியாகவும் இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது முறையே 2.24, 2.29 மற்றும் 2.34 சதவீதமாகும். (திரு திருச்சி சிவாவின் கேள்விக்கான பதில்)
சீட்டா மற்றும் சேடக் ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் விமானங்களை மாற்றுவது பற்றி செயல்பாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும்.
இந்த ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர், உள்நாட்டு இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் ரஷ்யாவில் கட்டமைக்கப்பட்ட கா-226டி-யை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கும், கீழ்காணும் செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776094
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776097
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776092
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776096
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776101
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776099
****
(Release ID: 1776209)
Visitor Counter : 266