தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நடிகர் விஜய் சேதுபதி உதவியுடன் அறிமுக இயக்குநர் கணேஷ் இயக்கிய கன்னட திரைப்படம் 'நீலி ஹக்கி', மாநகரம் மற்றும் கிராம வாழ்க்கைக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த ஒரு குழந்தையின் பார்வையை விளக்குகிறது

Posted On: 27 NOV 2021 5:31PM by PIB Chennai

பத்து வயது சிறுவனான சித்தா தனது அழகான கிராமத்தை விட்டு ஆரவாரம் நிறைந்த மாநகரத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்கிறான். அங்கு அவன் உணரும் விஷயங்கள் வாழ்க்கையின் நிதர்சனங்கள் குறித்து பேசுவதோடு, நிலைத்தன்மை மற்றும் நகரமயமாக்கல் குறித்த முக்கியமான கேள்விகளையும் எழுப்புகின்றன.

 

இவ்வாறு, அறிமுக இயக்குநர் கணேஷ் இயக்கிய கன்னட திரைப்படம் 'நீலி ஹக்கி', மாநகரம் மற்றும் கிராம வாழ்க்கைக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த ஒரு குழந்தையின் பார்வையை தனக்கே உரிய பாணியில் விளக்குகிறது

 

கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா திரைப்பட பிரிவில் பார்வையாளர்களுக்காக இப்படம் திரையிடப்பட்டது.

 

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இப்படத்தின் இயக்குநர், "52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பார்வையாளர்களுக்காக இப்படத்தை திரையிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வருடம் நடைபெற்ற புகழ்பெற்ற நியூயார்க் திரைப்பட விழாவில் இப்படம் முதல் முறையாக திரையிடப்பட்டது," என்றார்.

 

மெல்போன் திரைப்பட விழாவிற்கும் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறிய அவர், இந்தியாவின் தொலைதூர தெற்கு பகுதியை சேர்ந்த திரைப்படம் ஒன்று இந்த அளவிற்கு அங்கீகாரம் பெறுவது இன்னும் சிறப்பாக பணி புரிவதற்கான பெரும் நம்பிக்கையை எங்களுக்கு வழங்குகிறது என்றார்.

 

இப்படத்திற்கு பிரபல தமிழ் நடிகர் விஜய்சேதுபதி உதவி இருப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் குறித்து கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, இதன் கதை அவரது வாழ்க்கையை ஒத்திருப்பதாக கூறியதோடு உதவுவதற்கும் முன் வந்தார் என்று இயக்குநர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775617

******



(Release ID: 1775678) Visitor Counter : 216