தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளத்துறையில் லட்சத்தீவின் தற்சார்பை உறுதி செய்வதுதான் மத்திய அரசின் முன்னுரிமை: டாக்டர் எல் முருகன்

Posted On: 29 OCT 2021 7:10PM by PIB Chennai

லட்சத்தீவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்  டாக்டர் எல். முருகன் 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு அகாட்டி என்ற இடத்தில் உள்ளூர் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் பட்டாலியன் படையினர், மத்திய அமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதன்பின், அலங்கார மீன் வளர்ப்பு மையத்தை  மத்திய அமைச்சர் பார்வையிட்டார். அங்கு அதன் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.  அதன்பின் லட்சத்தீவில் மீன்வளத்துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட சுயஉதவிக் குழு பெண்களிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது, ‘‘லட்சத்தீவில் உள்ள பெண்கள் மற்றும் மீனவர்களை மேம்படுத்துவதுதான் மத்திய அரசின் நோக்கம் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் பயன்களை பெற்று, கடற்பாசி உற்பத்தியில் உள்ள அதிக சாத்தியங்களில் கவனம் செலுத்தி, தொழில்முனைவோர்களாக உருவாகும்படி  அவர் வலியுறுத்தினார்.   

அதன்பின் இந்த தீவில் உள்ள மீனவர்களுடன், அவர் கலந்துரையாடினார். மீன்வளத்துறையில் லட்சத்தீவின்  தற்சார்பை உறுதி செய்வதுதான் பிரதமர் திரு நரேந்திரமோடியின் தொலை நோக்கு என மத்திய அமைச்சர் கூறினார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் மீன்களை பதப்படுத்துவதற்கான கட்டமைப்பு, மதிப்பு கூட்டல் நடவடிக்கையை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.  மீன்பிடி தடை காலத்தில் கஷ்டங்களை சந்திக்கும் மீனவர்களுக்கு மழைக்கால நலத் திட்டங்களை மீண்டும் தொடங்க மீன்வளத் துறையினருக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் பல உதவிகளை மத்திய அமைச்சர் வழங்கினார்.  

மீன் பண்ணைகளை பார்வையிட்டபின், கவராத்தி தீவுக்கு மத்திய அமைச்சர் சென்றார். அங்கு அவரை மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் பல வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றத்தை மத்திய அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கினர். உள்ளூர் மீனவர்களுடனும் டாக்டர் முருகன் கலந்துரையாடினார்.

******


(Release ID: 1768243) Visitor Counter : 90
Read this release in: English , Malayalam