விவசாயத்துறை அமைச்சகம்
2020-21ம் ஆண்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி 329.86 மில்லியன் மெட்ரிக் டன்: மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
Posted On:
29 OCT 2021 4:54PM by PIB Chennai
2020-21ம் ஆண்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி 329.86 மில்லியன் மெட்ரிக் டன்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
2021-ம் ஆண்டை சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டாக ஐ.நா அமைப்பு அறிவித்தது. இதை முன்னிட்டு, வேளாண்துறை அமைச்சகம், ஐ.நா வேளாண் அமைப்புடன் இணைந்து நடத்திய ‘‘பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டு 2021’’ நிகழ்ச்சியில், மத்திய வோளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:
ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஊட்டச்சத்து பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தாண்டின் கருப் பொருள். மனித ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உணவு பாதுகாப்பில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் முக்கிய பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதும்தான் இந்த கருத்தரங்கின் நோக்கம்.
உலகளாவிய பிரபல வெளிநாட்டு பழங்கள் மற்றும் முக்கிய உள்நாட்டு பழ பயிர்களை நாட்டில் ஊக்குவிக்க 10 வெளிநாட்டு பழ வகைகள், 10 உள்நாட்டு பழவகை பயிர்களை வேளாண் அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கான திட்டத்தில் மாநில தோட்டக்கலை துறையினரும் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் 8951ஹெக்டேரில் வெளிநாட்டு வகை பழங்களும், 7154 ஹெக்டேரில் உள்நாட்டு பழவகைகளும் பயிரிடப்படும்.
தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில், இந்தியா 2வது பெரிய நாடாக உள்ளது. உலகளாவிய பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் 12 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 2019-20 நாம் அதிக அளவாக 320.77 மில்லியன் மெட்ரிக் டன்கள் காய்கறி, பழங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். 2020-21ம் ஆண்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி 329.86 மில்லியன் மெட்ரிக் டன்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.
****
(Release ID: 1767673)
Visitor Counter : 358