சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கல்பாக்கம் அவசர நிலை ஒத்திகை பயிற்சி முகாம் துவக்க விழா

Posted On: 27 OCT 2021 6:43PM by PIB Chennai

கல்பாக்கம் அணுசக்தி மையம், அணுசக்தி துறையின் பல பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், வேக அணு உலை (கட்டுமானம்), பாபா அணு ஆராய்ச்சி மைய பிரிவுகள் போன்றவை இதில் அடக்கம். அணுசக்தி விதிமுறைகளின்படி இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அவசரநிலை ஒத்திகையை முன்னிட்டு, மாவட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், பயிற்சி முகாம்களை இந்த மையம் நடத்தி வருகிறது.

நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் அவசர நிலை ஒத்திகை நிகழ்வை முன்னிட்டு, அதையொட்டிய பயிற்சி முகாமை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. நெ.செல்வம், இன்று (27.10.2021) துவக்கி வைத்தார்.

சென்னை அணுமின் நிலைய இயக்குனர் திரு.ம.பலராமமூர்த்தி அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். இந்த ஒத்திகை பொதுமக்கள் பாதிக்காத முறையில் நடத்தப்படும். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனது துவக்க உரையில், அவசர நிலை ஒத்திகையின் முக்கியத்துவத்தையும், மக்கள் பாதுகாப்பில் அதன் பங்கையும் குறிப்பிட்டு, மாவட்ட அதிகாரிகளின் பங்களிப்பை வலியுறுத்தினார்.

செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சாகித்தா பர்வீன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி. சரஸ்வதி, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, ஊரகவளர்ச்சி துறை, போக்குவரத்து துறை, உயர் அலுவலர்கள் மற்றும் அணுசக்தி மையத்தின் உயர் அதிகாரிகள் பலர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

துவக்க விழாவை தொடர்ந்து, மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வரும் ஒரு வாரத்தில் 200 அலுவலர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறுவார்கள்.

 

***


(Release ID: 1767009) Visitor Counter : 111


Read this release in: English