மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
காமதேனு தீபாவளி 2021 பிரச்சாரம் தொடங்கியது
Posted On:
03 OCT 2021 6:03PM by PIB Chennai
மாட்டு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட 100 கோடிக்கும் மேற்பட்ட தீப விளக்குகள் மற்றும் லட்சுமி-விநாயகர் சிலைகளை தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான காமதேனு தீபாவளி 2021 பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் முன்னாள் தலைவருமான டாக்டர் வல்லபாய் கதிரியா, காமதேனு தீபாவளி பிரச்சாரம் தொடங்குவதை குறிக்கும் வகையில் தனது அணியுடன் இணைந்து தேசிய இணைய கருத்தரங்கை நடத்தினார்.
இந்தியா முழுவதும் உள்ள பசு தொழில் முனைவோர் மற்றும் பசு பிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா பங்கேற்றார். காமதேனு தீபாவளிக்கான கூட்டங்கள், இணைய கருத்தரங்குகள் மற்றும் பயிற்சித் திட்டங்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்பட்டன.
காமதேனு தீபாவளி என்பது பசுவின் பால், தயிர், நெய் ஆகியவற்றுடன் அவற்றின் சாணம் மற்றும் சிறுநீரையும் முறையாக பயன்படுத்தி பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பசுக்களுக்கு அதிகாரமளிப்பதே ஆகும்.
பசுவின் பஞ்சகவ்யத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தீப விளக்குகள், மெழுகுவர்த்திகள், சாம்பிராணி கோப்பை, அகர்பத்தி, தூபக் குச்சிகள், பலகை, சுவர் அலங்கார பொருட்கள், லட்சுமி-விநாயகர் சிலைகள் போன்ற
தீபாவளி தொடர்புடைய பொருட்களும் இவற்றில் அடங்கும்.
பசு தொழில் முனைவோர் மற்றும் மாட்டு உரிமையாளர்களால் தயாரிக்கப்பட்ட கோமயா விளக்குகள் ரசாயன அடிப்படையிலான சீன விளக்குகளுக்கு, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக உள்ளன. கோடிக்கணக்கான மாட்டு சாண விளக்குகள் இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டன. பல தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இந்தியா முழுவதும் பயிற்சி அளித்தது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாட்டு சாணம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின. இந்த முறை இன்னும் அதிகம் பேரை சென்றடையும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள காமதேனு ஆயோக் உறுதிபூண்டுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பசு தொழில் முனைவோர் பயனடைவார்கள். மேலும், கோசாலைகள் தற்சார்பு நிலையை எட்டவும் இது உதவும். ‘ஸ்டார்ட்அப் இந்தியா’, ‘தற்சார்பு இந்தியா’ போன்ற பிரதமரின் லட்சியங்களும் வலுப்பெறும்.
இணைய கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து பசு தொழில் முனைவோர் மற்றும் கோசாலை உரிமையாளர்களை திரு பர்ஷோத்தம் ரூபாலா ஊக்குவித்தார். இந்தியா முழுவதும் உள்ள பசு மற்றும் பசு தொழில் முனைவோர் நலனுக்கான செயல்பாடுகளுக்காக டாக்டர் வல்லபாய் கதிரியா மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகளை அவர் பாராட்டினார். இறுதி சடங்குகளின் போது மரக் கட்டைகளுக்குப் பதிலாக பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட கட்டைகளை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதாக திரு ரூபாலா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760621
••••
(Release ID: 1760621)
(Release ID: 1760632)
Visitor Counter : 303