குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அரசு மருத்துவர்களுக்கு, முதல் பதவி உயர்வுக்கு முன், ஊரக சேவையை கட்டாயமாக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
Posted On:
05 SEP 2021 4:35PM by PIB Chennai
அரசு மருத்துவர்களுக்கு, முதல் பதவி உயர்வுக்கு முன்பு, ஊரக பகுதிகளில் சேவை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் நடந்த 11வது மருத்துவ ஆசிரியர்கள் தின விருது நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசியதாவது:
நாட்டில் உள்ள 60 சதவீத மக்கள் கிராமங்களில் வசிப்பதால், இளம் மருத்துவர்கள், ஊரகப் பகுதிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் சேவை செய்வது அவசியம்.
மருத்துவ தொழில் உன்னதமான தொழில். மருத்துவர்கள் நாட்டுக்கு ஆர்வத்துடன் சேவையாற்ற வேண்டும். மருத்துவர்கள், தங்களின் அனைத்து செயல்பாடுகளில், மனித குலத்திற்கான இரக்கத்தின் முக்கிய மதிப்பை நினைவில் கொள்ள வேண்டும். குழப்பத்தில் இருக்கும் போது, உங்கள் தார்மீகம், திசைகாட்டியாக இருக்கட்டும் மற்றும் எப்போதும் உயர்ந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவும்.
தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் பணியாற்றினால், எல்லையற்ற மற்றும் உண்மையான மகிழ்ச்சியை நீங்கள் பெறுவீர்கள்.
ஊரக பகுதிகளில், அதி நவீன சுகாதார கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கொவிட்-19 தொற்று, சிறந்த சுகாதார கட்டமைப்பின் தேவையை உணர்த்தியுள்ளது. இதன் மீது மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவர்-நோயாளி விகித்தில் உள்ள இடைவெளியை போக்க மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். மருத்துவர் - நோயாளி விகிதம் 1: 1,456 என்ற அளவில் உள்ளது. ஆனால் 1: 1000 அளவில் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மருத்துவ கல்லூரி அமைக்கும் அரசின் திட்டம் பாராட்டுக்குரியது.
மருத்துவப் படிப்பும், சிகிச்சையும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மலிவாக இருக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார்.
முன்பாக, பிரபல இதயநோய் நிபுணர் மற்றும் பொது சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் தேவி ஷெட்டி உட்பட பலருக்கு அவர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752319
-----
(Release ID: 1752373)
Visitor Counter : 285