பாதுகாப்பு அமைச்சகம்

பொன்விழா வெற்றிச் சுடரைப் பெற்றுக்கொண்டது மேற்கு கடற்படை

Posted On: 02 SEP 2021 5:19PM by PIB Chennai

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா அடைந்த வெற்றியின் பொன்விழா ஆண்டு நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து வரும் வெற்றிச் சுடர், செப்டம்பர் 1-ஆம் தேதி மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயிலை அடைந்தது. பஞ்சாப் படையைச் சேர்ந்த வீரர்களால் கொண்டுவரப்பட்ட இந்தச் சுடரை மகாராஷ்டிரா முதல்வர் திரு உத்தவ் தாக்கரே பெற்றுக்கொண்டார். முப்படைகளின் மூத்த அதிகாரிகள், 1971-ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற முன்னாள் படை வீரர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் அப்போது உடன் இருந்தனர். இன்று (செப்டம்பர் 2, 2021) கடற்படை கப்பல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வெற்றிச் சுடரை மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஆர் ஹரி குமார் பெற்றுக்கொண்டார்.

கௌரவ் நினைவு தூண் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது போரில் தங்களது இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாரம்பரிய முறையில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர்களை வைஸ் அட்மிரல் ஆர். ஹரிகுமார் கௌரவித்தார். முன்னாள் படை வீரர்கள் ஒரு சிலர் தங்களது வீரதீர அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751437

*****************



(Release ID: 1751509) Visitor Counter : 134


Read this release in: English