பாதுகாப்பு அமைச்சகம்
உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயார்: அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
Posted On:
29 AUG 2021 6:12PM by PIB Chennai
‘‘உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயார்’’ என வெலிங்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் கல்லூரியில் நடைபெறும் 77வது பயிற்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து, திரு ராஜ்நாத் சிங்கிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்த மையத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதற்கும், நாட்டின் பாதுகாப்பில் உருவாகிவரும் சவால்களை சமாளிக்கும் வகையில் ராணுவ கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுவதும் பாராட்டுக்குரியது.
மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயாராக இருக்கிறது. பாதுகாப்பு படைகள் முழு அளவிலான தளவாடங்களை பெற்றிருக்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும். நாம் நமது ராணுவத்தை தொடர்ந்து பலப்படுத்துவோம். உலகளவில் மாறிவரும் பாதுகாப்பு சூழல்களுக்கு ஏற்ப, எந்த சவால்களையும் சந்திக்க நாம் ஒரு படி முன்னோக்கி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் சவாலாக உள்ளது. அங்கு மாறும் சூழல்களால், ஒவ்வொரு நாடும் தனது யுக்தி பற்றி சிந்திக்க வைத்துள்ளது. இந்த பின்னணியில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ குழு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய யுகத்தில், நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு பரிமாணத்தையும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இந்த சவால்களை சமாளிக்கும் விதத்தில் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி, எதிர்கால ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து தயார் படுத்தும்.
இந்தியாவிடம் அனைத்து திறன்கள் இருந்தாலும், இப்போது வரை எந்த நாட்டையும் தாக்கியதில்லை. ஒட்டு மொத்த உலகத்தையும், இந்தியா எப்போதும் தனது குடும்பமாகவே கருதுகிறது.
அதேநேரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பேசினார்.
பாதுகாப்பு படை அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார். அவருடன் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, லெப்டினன்ட் ஜெனரல் எம்ஜேஎஸ் காலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750207
*****************
(Release ID: 1750258)
Visitor Counter : 299