சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: விவசாயிகள் பாராட்டு

Posted On: 09 AUG 2021 7:05PM by PIB Chennai

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9ம்தேதி) வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1.57 லட்சம் கோடிக்கு அதிகமான தொகையை, 9 தவணைகளில் தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

நடுத்தர விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தை பிரதமர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் மொத்தம் ரூ.6 ஆயிரத்தை தங்கள் வங்கி கணக்கில் 3 தவணைகளாக பெறுகின்றனர். 

இத்திட்டத்தை வரவேற்ற திருச்சிராப்பள்ளி விவசாயிகள், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்ததற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி, மணச்சநல்லூர் வட்டம் அதானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமதி ரேணுகா தேவி நன்றி தெரிவித்தார்.  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிப்பதற்காக மத்திய அரசுக்கு, மணச்சநல்லூரைச் சேர்ந்த விவசாயி திரு.சுதாகர் நன்றி தெரிவித்தார்.

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், அடுத்த தவணை தொகை ரூ.2000 அறிவித்ததற்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி அதானி கிராமத்தைச் சேர்ந்த திரு முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.

சிக்கலான நேரங்களில், இந்த நிதி, விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை சொந்தமாக நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என திருச்சிராப்பள்ளி மணிகண்டம் வட்டம் மேக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள். விவசாயிகளுக்கு இதுபோன்ற நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

*************



(Release ID: 1744189)
Read this release in: English