சுரங்கங்கள் அமைச்சகம்

உள்நாட்டு சுரங்கத்துறை மேம்பாட்டுக்கு பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மாநிலங்களவையில் தகவல்

Posted On: 09 AUG 2021 3:13PM by PIB Chennai

உள்நாட்டு சுரங்கத்துறை மேம்பாட்டுக்கு மாலி, பெரு, மொராக்கோ, ஜிம்பாப்வே,பொலிவியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.  

மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நவீன சுரங்கத் தொழில்நுட்பங்களை பின்பற்றி, உள்நாட்டு சுரங்கத்துறை மேம்பாட்டுக்கும்சுற்றுச்சூழல்  பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கனிமங்களை எடுப்பதை ஊக்குவிக்கவும், தேசிய கனிமங்கள் கொள்கையில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுரங்கத் தொழில் நிலையாக நடைபெறுவதை உறுதி செய்ய, கனிமங்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி விதிமுறைகளில் அவ்வப்போது திருத்தம் செய்யப்படுகிறது. சுரங்கங்களை ஏலம் எடுப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள், 3 நட்சத்திர அந்தஸ்தை பெறுவது கடந்த 2017ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புவியியல் மற்றும் கனிம வளங்கள் மேம்பாடு, மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம், சுரங்கத்துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக மாலி, பெரு, மொராக்கோ, ஜிம்பாப்வே,பொலிவியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கனிமங்கள் மீதான உரிமத் தொகை அதிகரிப்பு :

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்  9 (1) பிரிவின் படி, சுரங்கங்களை ஏலம் எடுப்பவர்கள், முக்கிய கனிமங்களை எடுப்பதற்கு உரிமத் தொகை செலுத்த வேண்டும். இந்த உரிமத் தொகையை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் வைத்துக் கொள்ளும். இந்த உரிமக் கட்டணங்கள் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.

உரிமத் தொகையை மதிப்பீடு செய்ய பல மாநில அரசு பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வு குழுவை சுரங்கத்துறை அமைச்சகம் கடந்த 2018ம் ஆண்டு அமைத்தது.  ஆய்வு குழு தனது அறிக்கையை கடந்த 2019ம் ஆண்டு தாக்கல் செய்தது. எதிர்கால ஏலங்களுக்கான கட்டணங்களை தீர்மானிக்கவும், பலவகை கட்டணங்களை கணக்கிடவும், தேசிய கனிம குறியீடை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் கனிம வளங்களின் மதிப்பீடு:

நாட்டில் உள்ள கனிம வளங்களை மதிப்பீடு செய்வது தொடர்ச்சியான நடவடிக்கை. இதில் இந்திய புவியியல் கணக்கெடுப்பு நிறுவனம்(ஜிஎஸ்ஐ), கனிமங்கள் ஆய்வு கார்பரேஷன் நிறுவனம்(எம்இசிஎல்), ஆய்வுக்கான அணு கனிமங்கள் இயக்குனரகம்(ஏஎம்டிஇஆர்), மாநிலங்களின் புவியியல் மற்றும் சுரங்கத் துறைகள், மத்திய, மாநில நிறுவனங்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744042

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744047

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744045

*****************



(Release ID: 1744152) Visitor Counter : 205


Read this release in: English , Punjabi