ரெயில்வே அமைச்சகம்

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: அமைச்சர்

Posted On: 04 AUG 2021 5:59PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், கீழ்காணும் தகவல்களை அளித்தார்

புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இதில் அடங்கும்.

814 நிலையங்களில் இது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியை துரிதப்படுத்துவதற்காக சில மண்டல ரயில்வேக்கள், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கிடையே பணிகள் பகிரப்பட்டுள்ளன.

2020 ஜூன் 20 அன்று அறிவிக்கப்பட்ட ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம், 2020 அக்டோபர் 22 வரை 125 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டது. ரயில்பாதைகளை இரட்டை தடமாக்குதல், மின்மயமாக்குதல், புதிய தடங்களின் கட்டுமானம், பாலங்களின் கட்டுமானம், சிக்னல் பணிகள் உள்ளிட்ட 143 உள்கட்டமைப்பு திட்டங்களை ஆறு மாநிலங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் துரிதப்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்தது.

பிகாரில் 36 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஜார்கண்டில் 28 உள்கட்டமைப்பு திட்டங்களும், மத்தியப் பிரதேசத்தில் 6 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஒடிசாவில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களும், ராஜஸ்தானில் 53 உள்கட்டமைப்பு திட்டங்களும், உத்தரப் பிரதேசத்தில் 143 உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, 14,14,604 மனித பணி நாட்கள் உருவாக்கப்பட்டன

ரயில்வே வசதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு தானியங்கி முறையில் கீழ் படுக்கையை ஒதுக்கீடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி, ஐஆர்சிடிசியின் ஆன்லைன் தளமான irctc.co.in மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்டவை சில முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742398

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742397

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742399

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742393

                                                                                ------


(Release ID: 1742516) Visitor Counter : 244


Read this release in: English , Punjabi