பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

கச்சா எண்ணையின் இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்: மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி தகவல்

Posted On: 04 AUG 2021 3:26PM by PIB Chennai

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இன்று கூறினார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இறக்குமதி மீதான சார்பைக் குறைக்கும் இலக்கை அடைவதற்கு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் பெட்ரோலியம் அமைச்சகம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.

நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக  பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நகர எரிவாயு விநியோக இணைப்பை விரிவுபடுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து எரிவாயு, அதாவது அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் டீசலில் உயிரி டீசல் கலப்பு திட்டங்களின் மூலம் எத்தனால் மற்றும் உயிரி டீசல் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

சில்லறை வணிக நிறுவனங்களைக் கண்காணிக்க எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் ஓர் அமைப்பு முறையை கடைப்பிடிக்கின்றன. கலப்படம் பற்றி ஆய்வு செய்வது ஓர் தொடர் நடவடிக்கையாகும். கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டில் ஈடுபடும் சில்லரை வியாபாரிக்கு எதிராக சந்தை ஒழுங்குபடுத்துதல் வழிமுறைகள் மற்றும் வியாபார ஒப்பந்தத்தின் அடிப்படையில், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகள் (2018-19 நிதி ஆண்டு முதல் 2020-21 வரை) மற்றும் நடப்பு நிதி ஆண்டில் (ஏப்ரல் 2021- ஜூன் 2021) இவ்வாறு கலப்படம் செய்த குற்றத்திற்காக 19 சில்லரை வணிக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலையான மாற்றத்தை நோக்கிய மலிவு போக்குவரத்து முன்முயற்சியின் கீழ் 22.7.2021 வரை 13 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளின் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. இந்த முன்முயற்சியில் ஈடுபட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள், சுமார் 1957 டன் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயுவை தொழில்முனிவோரிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளன.

திறந்தவெளி நிலப்பரப்பு உரிமைக் கொள்கையின் கீழ் 156,580 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மொத்தம் 105 ஆராய்ச்சி தொகுப்புகளுக்கு 5 கட்ட ஏலத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 89 தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளன. புதிய ஆராய்ச்சி உரிமை கொள்கை தொகுப்புகளின் மூலம் 2004-2005 இல் கச்சா எண்ணெயின் உற்பத்தி தொடங்கியது. 2004-05 முதல் 2020-21 வரை மொத்தம் 4.9 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெயின் வணிக ரீதியான உற்பத்தி திறந்தவெளி நிலப்பரப்பு உரிமைக் கொள்கை தொகுப்புகளில் இதுவரை தொடங்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742274

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742273

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742272

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742271

 

-------



(Release ID: 1742449) Visitor Counter : 203


Read this release in: English , Bengali