குடியரசுத் தலைவர் செயலகம்
பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் மேதகு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை
Posted On:
04 AUG 2021 12:30PM by PIB Chennai
நாட்டின் தலைசிறந்த ஆயுதப்படை பயிற்சி நிறுவனங்களுள் ஒன்றான இந்தக் கல்லூரியில், ஆயுதப் படைகள் மற்றும் நட்பு அண்டை நாடுகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நீலகிரி மலைகளின் இயற்கை அழகும், இந்தப் பகுதியின் ஆரோக்கியமான பருவநிலையும் கற்பதற்கு உகந்தவையாக அமைந்துள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னை மாகாணத்தின் முதல் சுகாதார மையம் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து நல்வாழ்வு மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த பருவ நிலை, உங்களைப் போன்ற பாதுகாப்பு தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கற்பதற்கும், பல்வேறு விஷயங்களுக்கும் பயனளிக்கிறது.
நாட்டின் உயர் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்டுவரும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்தவும், தன்னிறைவு அடைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆயுதப் படைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்தில் இந்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வளர்ச்சி என்ற ஏணியில் நீங்கள் ஏறும்போது, ஒற்றை சேவை திறன்களிலிருந்து பல நிலை சவால்களுக்கு நீங்கள் முன்னேற வேண்டும். அதற்கு இணக்கமான மற்றும் பல கள செயல்பாடுகளைப் பற்றிய அதிக புரிதல் தேவை. நமது ஆயுதப்படைகள், நாட்டின் மதிப்புமிக்க அமைப்புகளுள் ஒன்றாகத் திகழ்கிறன. அவற்றின் தளர்வறியா முயற்சிகள் மற்றும் தியாகங்களால் குடிமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளன. போர் மற்றும் அமைதி காலங்களில், நாட்டிற்கு விலைமதிப்பில்லா சேவையை அவை அளித்துள்ளன. சமீபத்திய காலம் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் சவாலாக உள்ளது. கொவிட்- 19 பெருந்தொற்று, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முழுவதும் மாற்றங்கள் நிறைந்த சவாலான நிலையை நாம் கடந்து வருகிறோம். இந்த சமயத்தில் நமது தேச நலனை பாதுகாக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புதுமையான வழிகளை நாம் சிந்திக்க வேண்டும். சைபர் உலகம் மற்றும் விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நவீனரக தொழில்நுட்பங்கள் அவசியம். பருவநிலை மாற்றம் போன்ற விஷயங்கள் பாதுகாப்பு தயார் நிலையில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
21-ஆம் நூற்றாண்டின் சமூகம், அறிவுசார் சமூகமாக வர்ணிக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் உண்மையான சக்தி, அறிவு. பாதுகாப்பு தொழில் நிபுணர்களாக, அறிவுசார் போராளியாக நீங்கள் செயல்பட வேண்டும்.
தன்னம்பிக்கை, வீரம், தாங்குத்தன்மை, ஒற்றுமை, பணிவுடைமை மற்றும் எளிமை ஆகியவை தனி நபராக உங்களை மேலும் வலுப்படுத்தும். நவீனரக தொழில்நுட்பங்கள், தலைசிறந்த உத்திகள் மற்றும் சமீபத்திய வளர்ச்சிகள் ஆகியவை மிகச்சிறந்த தொழில்சார் வல்லுநர்களாக உங்களை மாற்றும்.
மாணவ அதிகாரிகள் மற்றும் மேன்மைமிகு ஆசிரியர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
நன்றி,
ஜெய் ஹிந்த்!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742205
*****
(Release ID: 1742205)
(Release ID: 1742264)
Visitor Counter : 260