உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

தேசிய உணவு தொழில்நுட்பம், மெகா உணவுப் பூங்காக்கள், குளிர்பதன வசதி குறித்து மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் விளக்கம்

Posted On: 03 AUG 2021 1:21PM by PIB Chennai

மத்திய உணவு மற்றும் பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், நாடாளுமன்ற மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

தேசிய உணவுத் தொழில்நுட்பம்:

உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், ஹரியானாவில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள நிறுவனத்தில் உணவு தொழில்நுட்பம் மற்றும் அது சம்பந்தமான துறைகளில் 6 கல்வி படிப்புகளும் ஹரியானாவில் உள்ள நிறுவனத்தில் 12 பாடப்பிரிவுகளும் அளிக்கப்படுகின்றன. உணவு பதப்படுத்துதல் தொழில்துறைகளில் மனித சக்தியின் தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த இரு கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படும் நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவையும் உணவுத் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை அளித்து வருகின்றன. கூடுதலாக தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் அமைச்சகத்திடம் இல்லை

உணவுப் பதப்படுத்துதல் துறையில் சுய உதவிக் குழுக்கள்:

உணவு பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது, விளைநிலங்கள் தவிர்த்த வேலை வாய்ப்பை உருவாக்குவது முதலிய நோக்கங்களுக்காக, பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மெகா உணவுப் பூங்காக்கள், ஒருங்கிணைந்த குளிர் பதன வசதி மற்றும் உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதலின் திறனை உருவாக்குவது/ விரிவுபடுத்துவது, வேளாண் பதப்படுத்துதல் தொகுப்புகளுக்கு உள்கட்டமைப்பு, முதலியவை இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் ஆகும். சுய உதவிக் குழுக்கள் மற்றும் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள்/ விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் ஆகியவை இந்தத் திட்டங்களின் பயனாளிகள் ஆவர்பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டத்தினால் ஏற்படும் பலன்களை புதிய வேளாண் சட்டங்கள் பூர்த்தி செய்யும்.

மெகா உணவுப் பூங்காத் திட்டம்:

உணவு பதப்படுத்துதல் தொழில்துறைகளுக்கு  நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக உணவுப் பூங்காத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பூங்காக்களை அமைப்பதற்கான நிதி உதவியை அமைச்சகம் அளிக்கிறது. தரமான விநியோக சங்கிலியுடன் கூடிய வலுவான உணவு பதப்படுத்துதல் தொழில்துறையை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சேகரிப்பு மையங்கள், அடிப்படைப் பதப்படுத்துதல் மையங்கள் மற்றும் குளிர்சாதன உள்கட்டமைப்பு வசதிகளும் இதில் இடம் பெறக்கூடும். அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக அமல்படுத்துவதற்கு அமைச்சகம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திட்டத்தை  அமல்படுத்துவதில் ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்காக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது; போதிய அனுமதி கிடைப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படுகிறது; திட்டத்தை அமல்படுத்துவதற்கு வசதியாக திட்ட வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன; மெகா உணவுப் பூங்காக்களை அமைப்பதற்கு நிதி உதவி பெறுவதற்காக பிரதமரின் கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் துணை திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது;இத்திட்டத்தின் பலன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குளிர்சாதன வசதித் திட்டம்:

வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதலை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக்கூட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தை பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 353 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டின் திட்ட மதிப்பீடு ரூ. 227.60 கோடியாகும். 30.6.2021 வரை இந்தத் திட்டத்திற்காக ரூ. 53.45 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741805

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741804

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741803

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741802  

 

-----

 

 



(Release ID: 1741975) Visitor Counter : 176


Read this release in: English , Bengali