சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, தேசிய சுகாதார இயக்கம் ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது

Posted On: 30 JUL 2021 7:21PM by PIB Chennai

பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, அகில இந்திய வானொலி செய்திகள், மாநில நோய் தடுப்பு அலுவலர்கள் மற்றும் ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா) இருந்து தேசிய சுகாதார இயக்கத்தின் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது. சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த தகவல்களை வலியுறுத்துவதற்காகவும், தடுப்புமருந்து செலுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட அமர்வுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு லாவ் அகர்வால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொடர்பு திட்டமிடுதலில் புதுமையை புகுத்துமாறும், சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த சமூக பொறுப்பை ஊக்குவிக்குமாறும், தடுப்புமருந்து தயக்கத்தை போக்குவதற்காக அவை குறித்த தவறான தகவல்களை முறியடிக்குமாறும் அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 

சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த மக்கள் இயக்கத்தை உருவாக்குமாறும், சமுதாய உதாரணங்களை முன்னிறுத்தியும், கொவிட் வீரர்கள் மற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களின் ஊக்கமளிக்கும் கதைகளை மக்களுக்கு எடுத்து சென்றும், சிறப்பான சமூக பங்களிப்பின் மூலம் உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து நிகழ்வுக்கு ஆதரவளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

தடுப்புமருந்து தயக்கத்தை எதிர்கொள்வதில் பத்திரிகை தகவல் அலுவலகம், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் ஆக்கப்பூர்வ பங்களிப்பு குறித்து பேசிய அவர், தகவல்கள், காணொலிகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை பத்திரிகை தகவல் அலுவலகம் சரிபார்ப்பதால், தவறான தகவல்கள் தடுக்கப்பட்டு, சரியான தகவல்கள் சரியான நேரத்தில் மக்களை சென்றடைவதாகவும் அவர் கூறினார். தடுப்புமருந்து பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் கலாச்சார விஷயங்களை சரியான முறையில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி பயன்படுத்தி வருவதாக திரு அகர்வால் தெரிவித்தார்.

பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகளவில் சமூக ஊடகங்களில் உலா வருவதால், சர்வதேச உண்மை சரிபார்த்தல் குழுமத்துடன் இணைந்து 80-க்கும் மேற்பட்ட உண்மை சரிபார்ப்பு செயலிகளுடன் பயனர்களை இணைக்கும் வாட்ஸ் அப் சாட்பாட், தவறான தகவல்களை அடையாளப்படுத்தும் டிவிட்டர் மற்றும் முகநூல் எச்சரிக்கை அமைப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார். 

தடுப்புமருந்து தயக்கத்தை போக்குவதிலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை முறியடிப்பதிலும் ஊடகங்களில் ஆக்கப்பூர்வ பங்கை அங்கீகரித்த அவர், “மக்கள் சோர்வுறலாம், வைரஸ் சோர்வடையாது. நாமும் தொடர்ந்து பணியாற்றி, கொவிட்டுக்கு எதிரான நமது ஒருங்கிணைந்த போரை வலுப்படுத்த வேண்டும்,” என்று திரு அகர்வால் கேட்டுக்கொண்டார்.

ஊடகங்கள் மற்றும் ஊடகத்தினருடன் தொடர்புடைய அனைவருமே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும், சரியான கொவிட் நடத்தை விதிமுறை மற்றும் தடுப்புமருந்து குறித்து மக்களுக்கு அவர்கள் ஊக்கமளிக்கலாம் என்றும் திரு அகர்வால் குறிப்பிட்டார். மூன்றாவது அலை எப்போது வரும் என்று நம்மிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நாம் அனுமதிக்கும் போது அது வரும் என்பதே எனது பதில்,” என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றால் ஏற்படும் மன நல சிக்கல்கள் குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தங்களது அனுபவங்கள், மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், சவால்கள், புதுமையான பிரச்சார யோசனைகளை பயிலரங்கில் பங்கேற்றோர் பகிர்ந்து கொண்டனர். மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் இதில்  கலந்துக் கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1740842

*****************



(Release ID: 1740870) Visitor Counter : 261


Read this release in: English , Hindi