அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் & தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றுவிடவில்லை: அமைச்சர்

Posted On: 30 JUL 2021 3:48PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு இத்துறையில் திறன் மிகுந்தவர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று விடவில்லை.

சிறந்த மனித வளங்களை நாட்டிலேயே இருக்க செய்வதற்கு மும்முனை யுக்தி பின்பற்றப்படுகிறது. நவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, அறிவியல் தேடலுக்கான சூழல் மற்றும் கல்வி/ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்குதல்; வெளிநாட்டில் வாழும் இந்திய விஞ்ஞானிகளுக்கு நமது நாட்டில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல்; மற்றும் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆராய்ச்சியை நமது நாட்டிலேயே மேற்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையே இந்த யுக்தி ஆகும்.

அறிவியல் சமுகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

வடகிழக்கு மாநிலங்களில் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை பொருத்தவரை, கவுகாத்தியில் அறிவியல் & தொழில்நுட்பத்தில் முன்னேறிய படிப்புகளுக்கான நிறுவனத்தையும், ஷில்லாங்கில் தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் வீச்சுக்கான வடகிழக்கு மையத்தையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நிறுவியுள்ளது.

உயிரி வளங்கள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான நிறுவனத்தை இம்பாலில் உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவியுள்ளது. அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பு ஆய்வகங்களில் ஒன்றான சிஎஸ்ஐஆர்-அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வடகிழக்கு நிறுவனம் அசாமில் உள்ள ஜோர்ஹட்டில் அமைந்துள்ளது.

லாம்பெல்பேட், இம்பால், மணிப்பூர் மற்றும் நகர்லகூன், இடாநகர், அருணாச்சலப் பிரதேசத்தில் அதன் கிளை ஆய்வகங்கள் அமைந்துள்ளன. சிஎஸ்ஐஆர்-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்தின் திட்ட அலுவலகம் அசாமின் தேஸ்பூரில் உள்ளது. சிஎஸ்ஐஆர்-மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மையம் துயிரியால், மிசோராமில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740691

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740690

*****************



(Release ID: 1740829) Visitor Counter : 198


Read this release in: English , Punjabi