பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் விவரம்
Posted On:
29 JUL 2021 4:17PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் எடுத்து வருகிறது. ‘மிஷன் சக்தி’ எனும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் மேம்படும். மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 227.86 லட்சமும், 2019-20-ல் ரூ 105.81 லட்சமும், 2020-21-ல் ரூ 11.67 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் 2018-19-ல் ரூ 5446.69 லட்சமும், 2019-20-ல் ரூ 1968.98 லட்சமும், 2020-21-ல் ரூ 1362.64 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
2015 ஏப்ரல் 1 முதல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தால் ஒற்றை நிறுத்த மையங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நாள் வரை, 733 ஒற்றை நிறுத்த மையங்களுக்கு நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 704 ஒற்றை நிறுத்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 38 ஒற்றை நிறுத்த மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 34 மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 6591 வழக்குகளை அவை கையாண்டுள்ளன.
தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒரே இடத்தில் மருத்துவ சிகிச்சை, காவல் துறை விசாரணை, சட்ட உதவி, மனநல ஆலோசனைகளின் மூலம் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்து போராடுவதற்கு அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவித் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு-4 (2015-16) அறிக்கையின் படி, 22.9 சதவீதம் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. 20.2 சதவீதம் ஆண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது.
2005-06-ல் நிலவிய பெண்களிடையேயான 35.5 சதவீத ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஆண்களிடையே நிலவிய 34.2 சதவீத ஊட்டச்சத்து குறைபாட்டுடன் ஒப்பிடும் போது நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வு-4 (2015-16) அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் சராசரி உடல் எடை குறியீட்டை விட குறைவாக உள்ள பெண்களின் சதவீதம் 14.6 ஆகவும், சராசரி உடல் எடை குறியீட்டை விட குறைவாக உள்ள ஆண்களின் சதவீதம் 12.4 ஆகவும் உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின் படி, கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 645 ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் எட்டு குழந்தைகள் தங்களது பெற்றோரை பெருந்தொற்றுக்கு இழந்துள்ளனர்.
கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 10 லட்சம் நிதியுதவியை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு உதவிகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மாநில/யூனியன் பிரதேச அளவில் பாலின பட்ஜெட் முறையை அமைப்புரீதியாக செயல்படுத்துவதற்கான ஆதரவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் தொடர்ந்து அளித்து வருகிறது.
பாலின பட்ஜெட் முறையை 27 மாநிலங்கள் இது வரை செயல்படுத்தி உள்ளன. பாலின இடைவெளியை சரிசெய்யவும், பாலின சமநிலையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியை இந்திய அரசு நிறுவியுள்ளது. இதன் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலத்திற்கு 2018-19-ம் ஆண்டு ரூ 58.07 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 68.95 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 54.26 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களின் தடுப்பு, கண்டறிதல், விசாரணை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதிலும், அறிவுரைகள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது.
சைபர் தடய அறிவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்களை அமைப்பதற்காகவும், இளநிலை சைபர் ஆலோசகர்களின் பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்காகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதியுதவி வழங்கியுள்ளது. 18 மாநிலங்களில் சைபர் தடய அறிவியல் மற்றும் பயிற்சி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின் படி, 2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 645 ஆகும்.
கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 10 லட்சம் நிதியுதவியை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். pmcaresforchildren.in எனும் இணைய முகவரியின் மூலம் இத்திட்டத்தை யார் வேண்டுமானாலும் அணுகி, ஆதரவு தேவைப்படும் குழந்தை குறித்த தகவலை அளிக்கலாம்.
மேலும், கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை பதிவு செய்ய ஷி-பாக்ஸ் எனும் ஆன்லைன் முறையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இத்தளத்தில் புகார் பதிவானவுடன், உரிய அதிகாரியை அது உடனடியாக சென்றடைந்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்வேறு மத்திய அமைச்சகங்கள் தொடர்பாக 391 புகார்கள் ஷி-பாக்ஸ் மூலம் இது வரை பெறப்பட்டுள்ளன. 2020 ஜனவரி 1 முதல் 150 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/மத்திய அமைச்சகங்கள்/துறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740324
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740322
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740325
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740327
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740328
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740326
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740323
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740321
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740320
*****************
(Release ID: 1740454)
Visitor Counter : 853