பாதுகாப்பு அமைச்சகம்
விமானப்படையின் 101வது படைப்பிரிவில் ரபேல் போர் விமானம் சேர்ப்பு
प्रविष्टि तिथि:
28 JUL 2021 7:16PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் கிழக்கு கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் அமைந்திருக்கும் 101வது படைப்பிரிவில் ரபேல் போர் விமானம் இன்று (ஜூலை 28) முறைப்படி சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா தலைமை தாங்கினார். அவரை, விமானப்படையின் கிழக்கு கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் அமித் தேவ் வரவேற்றார். ஹசிமரா விமானப்படை தளத்துக்கு ரபேல் போர் விமானத்தின் வருகையை தெரிவிக்கும் வகையில் போர் விமானங்களின் அணிவகுப்பும் நடைப்பெற்றது.
ஹசிமரா விமானப்படை தளத்தில் ரபேல் போர் விமானத்துக்கு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வீரர்களிடம் பேசிய, விமானப்படை தளபதி, ஹசிமராவில், ரபேல் போர் விமானம் சேர்க்கப்பட்டது, மிக கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை எனவும், கிழக்கு பகுதியில் விமானப்படையின் திறனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறினார். 101வது படைப்பிரிவின், பெருமையான வரலாற்றை நினைவுக் கூர்ந்த விமானப்படை தளபதி, இதற்கு சாம்ப் மற்றும் அக்னூர் ராஜாளி பறவைகள் என்ற பட்டம் வழங்கப்பட்டதையும் எடுத்து கூறினார். இந்தப் படைப்பிரிவின் புதிய வரவுடன், விமானப்படையினர் ஈடுசெய்ய முடியாத வைராக்கியம், உறுதி, ஆற்றலுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தப் படைப்பிரிவு எப்போதும், எங்கும் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும், இந்தப் படைப்பிரிவு இங்கு இருப்பதால், எதிரிகள் எப்போதும் மிரட்டப்படுவர் என்பது உறுதி எனவும் விமானப்படை தளபதி கூறினார்.
விமானப்படையின் 101வது படைப்பிரிவு, ரபேல் போர் விமானம் சேர்க்கப்பட்ட இரண்டாவது பிரிவு ஆகும். இந்தப் படைப்பிரிவு, கடந்த 1949ம் ஆண்டு மே 1ம் தேதி பாலம் விமானப்படை தளத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் படைப்பிரிவு ஹார்வர்ட், ஸ்பிட்பயர், வேம்பயர், எஸ்யு-7 மற்றும் மிக் 21எம் ரக போர் விமானங்களை கடந்த காலத்தில் இயக்கியுள்ளது. கடந்த 1965 மற்றும் 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரிலும், இந்தப் படைப்பிரிவு பங்கெடுத்தது என்பது இதன் பெருமை மிகு வரலாற்றில் அடங்கியுள்ளது.
-----
(रिलीज़ आईडी: 1740102)
आगंतुक पटल : 376