சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மலேரியா, ஃபிலேரியா & காலா அசார் உள்ளிட்ட நோய்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் விவரம்
Posted On:
23 JUL 2021 4:39PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மலேரியா, ஃபிலேரியா மற்றும் காலா அசார் ஆகிய மூன்று நோய்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஏந்திகள் வழி பரவும் நோய்களின் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு எடுத்து வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் மலேரியா பாதிப்புகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முடிவு கட்டுவதற்கான தேசிய அளவிலான திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
விரிவான ஆரம்ப மருத்துவ சேவையை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில், குறிப்பாக கிராமங்கள் மற்றும் தொலைதூர இடங்களில் உள்ள துணை நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி மொத்தம் 5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
சுகாதார அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதமாக, 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமரின் தற்சார்பு ஸ்வஸ்த் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேக கொவிட் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 2020 மார்ச்சில் 163 ஆக இருந்த நிலையில், 2021 ஜூன் 30-ன் படி அது 4389 ஆக 27 மடங்கு அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை 2020 மார்ச்சில் 2500 ஆக இருந்த நிலையில், 2021 ஜூன் 30-ன் படி அது 121,671 ஆக 48 மடங்கு அதிகரித்துள்ளது.
அவசர கால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு-1-ன் கீழ் ரூ 15,000 கோடி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2021 ஏப்ரலில் வழங்கப்பட்ட நிலையில், அவசர கால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு-2-ன் கீழ் ரூ 23,123 கோடியை வழங்குவதற்கு 2021 ஜூலை 8 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2012-17-க்கான 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் தேசிய நுண்ணுயிர் கட்டுப்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. 2021 மார்ச் 20 வரை 24 மாநிலங்களில் உள்ள 30 இடங்கள் இதில் இணைத்துக்கொள்ளப் பட்டுள்ளன.
மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல் திட்டம், நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி கண்காணிப்பு திட்டம், நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு நிதியுதவி பெறும் உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத திட்டமான ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் 2018 செப்டம்பர் 23 அன்று தொடங்கப்பட்டது.
மருத்துவமனை சிகிச்சைகளுக்காக ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டை ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் வழங்குகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 36667 ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு, 4012 ஒப்புதலளிக்கப்பட்ட மருத்துவமனை சேர்க்கைகள் நடைபெற்று, ரூ 38,240,413,903 மதிப்பிலான மருத்துவமனை சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, 80 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு இ-சஞ்ஜீவனி தேசிய தொலைமருத்துவ தளம் மூலம் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், ஒரு நாளைக்கு 60,000-க்கும் அதிகமான நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் ஆந்திரா முதலிடத்திலும் (2013266), கர்நாடகா இரண்டாவது இடத்திலும் (1470132), தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் (1364567) உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738153
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738154
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738156
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738169
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738227
----
(Release ID: 1738371)
Visitor Counter : 298