பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள், தமிழகத்தில் பயனடைந்தோர் விவரம்
Posted On:
22 JUL 2021 4:48PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி, கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நாட்டில் கொவிட்-19 காரணமாக பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ 2021 ஏப்ரல் முதல் மே 28 வரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 645 ஆகும்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 8 குழந்தைகள் கொவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ளனர். இவர்கள் நலனுக்கான திட்டங்களை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 1023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 983 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த அவசரகால எதிர்வினை மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களின் விசாரணையை கண்காணிப்பதற்காக ஆன்லைன் ஆய்வு உபகரணம் ஒன்றை அரசு நிறுவியுள்ளது, பாலியல் குற்றவாளிகளின் தகவல்களை கொண்ட தேசிய அளவிலான தரவு தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அமைச்சகம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஆன்லைனில் நிகழ்த்தப்படும் குற்றங்களை தடுப்பதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக www.cybercrime.gov.in எனும் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், இவை குறித்து புகார் அளிப்பதற்காக 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளது. காவல் மற்றும் பொதுமக்கள் ஒழுங்கு ஆகியவை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு அறிவுரைகள் மற்றும் நிதி உதவியை மத்திய அரசு அளித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கருத்தரங்கங்களை தேசிய மகளிர் ஆணையம் நடத்தி வருகிறது.
ஊட்டச்சத்து உதவி, பள்ளிக்கு முந்தைய கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி, தடுப்பு மருந்து வழங்கல், ஆரோக்கிய பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகள் ஆகிய ஆறு சேவைகளை உள்ளடக்கிய தொகுப்பு அங்கன்வாடி நோக்கங்களை அடையும் விதத்தில் 6 வயதுக்கு கீழுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் பல்வேறு உதவிகள் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. 2021 மார்ச் 31 நிலவரப்படி, 675.07 லட்சம் குழந்தைகள் மற்றும் 156.73 லட்சம்
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து உதவி வழங்கப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தவிர்த்து, நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநில ஆணையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும் இருந்து 50857 புகார்கள் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்டு, 20836 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.
2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்து மட்டும் 2181 புகார்கள் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்டு, 603 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.
தாய்மார்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் 2020-21 நிதி ஆண்டில் 64.35 லட்சத்திற்கும் அதிமான பயனாளிகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கான ஒரு வருடத்திற்கான இலக்கு 51.70 லட்சம் பயனாளிகள் ஆகும்.
அனைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதன் மூலம் பயனடையலாம். 2020-21-ம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசு பங்கு சேர்த்து ரூ 2475.89 கோடி இத்திட்டத்தின் பயனாளிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நிர்பயா நிதியின் கீழ் இது வரை ரூ 6212.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு (2021-22 நிதி ஆண்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ 500 கோடியையும் சேர்த்து), ரூ 4087.37 கோடி தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு வழங்கப்பட்டு, ரூ 2871.42 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, ரூ 9764.30 கோடி மதிப்பிலான திட்டங்கள் அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் மதிப்பிடப்பட்டுள்ளது. நிர்பயா நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ 317.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 296.62 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737759
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737761
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737762
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737765
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737767
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737771
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737773
----
(Release ID: 1737897)
Visitor Counter : 753