குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கொவிட் தொற்றுக்குப் பிந்தைய உலகம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கங்களில் நிபுணர் குழுவினர் கவனம் செலுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
Posted On:
03 JUL 2021 1:48PM by PIB Chennai
மனித சமூகம் எதிர்கொள்ளும் மிக தீவிரமான சவால் என்று கொவிட்-19 பெருந்தொற்றைக் குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, தொற்றுக்குப் பிந்தைய உலகம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கங்களில் இந்தியாவின் கேந்திர மற்றும் கல்வித்துறை சமூகத்தினர் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் அலுவல் சாரா தலைவரான குடியரசு துணைத் தலைவர், ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் 19-வது நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தக் கவுன்சிலின் நிர்வாக அமைப்பின் 20-வது கூட்டத்திற்கு அவர் தலைமைத் தாங்கினார்.
கூட்டங்களில் பேசிய குடியரசு துணைத் தலைவர், பெருந்தொற்றினால் ஏற்பட்ட இடையூறுகளினால் தடை ஏற்படாமல் தொடர்ந்து பணிகளை மேற்கொண்ட உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலை பாராட்டினார். கடந்த 7 மாதங்களில் தனது ஆராய்ச்சி நடவடிக்கைகள் மட்டுமல்லாது மாநாடுகள், குழு விவாதங்கள், கருத்தரங்கங்கள், புத்தகத்தின் மீதான விவாதங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்த கவுன்சில் நடத்தியுள்ளது.
உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் நிகழ்ச்சிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து பங்கேற்று வருவது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடல்சார் விவகாரங்கள் இந்திய- பசிபிக் பெருங்கடல்களின் முன்முயற்சி, இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், 2021-22 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா செயல்படுவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா- ஜப்பான்- ரஷ்யா ஒத்துழைப்பு போன்ற விஷயங்களில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியின்போது உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் டிசிஏ ராகவன் மற்றும் கவுன்சிலின் ஆராய்ச்சியாளர் டாக்டர் விவேக் மிஷ்ரா ஆகியோர் எழுதிய “சப்ரூ ஹவுஸ்: ஏ ஸ்டோரி ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் பில்டிங் இன் வேர்ல்டு அஃபேர்ஸ்” என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்.
டாக்டர் டிசிஏ ராகவனின் பதவிக்காலம் ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைவதை அடுத்து, இந்தக் கூட்டத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் (கிழக்கு) டாக்டர் விஜய் தாகூர் சிங், இந்தக் கவுன்சிலின் அடுத்த தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732489
----
(Release ID: 1732507)
Visitor Counter : 213