சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கொவிட் நடத்தை நெறிமுறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் – தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
Posted On:
02 JUL 2021 3:42PM by PIB Chennai
தமிழக பொது சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி, யூனிசெப், உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கொரோனா நடத்தை நெறிமுறை குறித்த நான்கு நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூர் மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கொரோனா நடத்தை நெறிமுறை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் அட்டைகள், ஒலிப்பெருக்கிகள் அடங்கிய 10 பிரச்சார வாகனங்கள், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைககளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகியவை குறித்து தன்னார்வலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்தப் பிரச்சாரம் இன்று (ஜூலை 2) முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலர் திரு. ராதாகிருஷ்ணன், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் திரு. மா.அண்ணாதுரை, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். செல்வ விநாயகம், யூனிசெப் மாநில அதிகாரி திரு. சுகதா ராய், உலக சுகாதார நிறுவன அதிகாரி திரு. அருண் குமார், தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருமதி. விஜயலட்சுமி, பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் திரு. குருபாபு பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1732261)
Visitor Counter : 120