அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மன அழுத்த சிகிச்சையில் யோகா பயிற்சி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Posted On:
19 JUN 2021 2:14PM by PIB Chennai
அதீத மன அழுத்த நோய் உள்ள நோயாளிகளுக்கு, மன அழுத்தத்திற்கான சிகிச்சையுடன் யோகாவும் நல்ல பலனை அளிப்பதாக புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
பெங்களூரில் உள்ள மனநல மற்றும் மூளை நரம்பியல் தேசிய மையத்தின் (நிம்ஹன்ஸ்) மனநோய் மருத்துவத்துறையின் பேராசிரியர் டாக்டர் முரளிதரன் கேசவன் தலைமையிலான குழுவினர், அதீத மன அழுத்த நோய் மற்றும் நரம்பு உயிரியல் சம்பந்தமான பிரச்சினைகளில் யோகா சிகிச்சை முறைகளின் பலன்களை மதிப்பீடு செய்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் யோகா மற்றும் தியானத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (சத்யம்) திட்டத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, “தி கனடியன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி” என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரச்சினையின் தொடக்கத்திலேயே யோகா சிகிச்சை அளிக்கப்படுவது சிறந்த பலன்களை அளிப்பதாகவும், லேசான மன அழுத்த பிரச்சினைகளுக்கு யோகாவை தனி சிகிச்சையாக அளிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மன அழுத்தப் பிரச்சினை உள்ள நோயாளிகள் விரைவில் குணமடைவதில் யோகாவின் பங்கு முக்கியமாகக் கருதப்படுவதால் நிம்ஹன்ஸ் மையத்தின் உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகள் முறையான யோகா பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு டாக்டர் முரளிதரன் கேசவனை (drmuralidk[at]gmail[dot]com) தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728510
*****************
(Release ID: 1728614)
Visitor Counter : 453