சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

‘‘கொரோனா தொற்று நேரத்தில் தொழில் ஆலோசனை மற்றும் இளைஞர்களிடம் தடுப்பூசி பயம்’’ பற்றிய இணைய கருத்தரங்கு

Posted On: 11 JUN 2021 3:36PM by PIB Chennai

 ‘‘கொரோனா தொற்று நேரத்தில் தொழில் ஆலோசனை மற்றும் இளைஞர்களிடம் தடுப்பூசி பயம்’’ பற்றிய இணைய கருத்தரங்கை மத்திய தகவல் மற்றும் ஒலிரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோவையில் உள்ள கள விளம்பரத்துறை அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவை கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியுடன் இணைந்து நேற்று(ஜூன் 10) நடத்தியது.  

இதில் கலந்து கொண்ட பிரமுகர்களை சென்னை களவிளம்பரத்துறை அலுவலகத்தின் இயக்குனர் திரு ஜே.காமராஜ், ஐஐஎஸ் வரவேற்றார். அவர் பேசுகையில், ‘‘இளைஞர்களிடையே தடுப்பூசி போடுவதை வலியுறுத்த இணைய கருத்தரங்கு நடத்துவது இப்போதைய தேவை என குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கொண்டு, தயக்கம் இன்றி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என அவர் கூறினார். பெருந்தொற்று சூழலில், மாணவர்களுக்கு வேலை குறித்த ஆலோசனை வழங்க வேண்டியது அவசியம் என்றும், இது அவர்களின் பலத்தை கண்டறிந்து, வேலை இலக்குகளில் கவனம் செலுத்த உதவும் என அவர் வலியுறுத்தினார்.

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் பொறியியல் பிரிவு டீன், டாக்டர் ஜி.கே.டி பிரசன்ன வெங்கடேசன் பேசுகையில், தொற்று சமயத்தில் மன ஆரோக்கியம் ஒவ்வொருவருக்கும் முக்கிய கவலையாக மாறியுள்ளது என்றும், அரசின் அனைத்து கட்ட முயற்சிகள் பெருந்தொற்றை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த பெருந்தொற்றுமாணவர்களுக்கு கற்பிக்கும் திறமையான முறையை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என அவர் கூறினார். இது போன்ற இணைய கருத்தரங்குகள், மாணவர்கள் இதுவரை சந்திக்காத மனரீதியான, கல்விரீதியான சூழலை சமாளிக்க முயற்சிப்பதில் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமை உரையாற்றிய சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகம் / களவிளம்பரத்துறை அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு எம்.அண்ணாத்துரை ஐஐஎஸ், நாம் வாழும் தகவல் யுகத்தில், பெற்ற அபரிமிதமான அறிவில் இருந்து சரியான நடவடிக்கையை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். சமூக ஊடகங்கள் மூலம் பரிமாறப்படும் ஏராளமான தகவல்களில், போலி செய்திகளை அடையாளம் கண்டு தவிர்ப்பதில் அறிவியல் ரீதியான மனநிலையை பின்பற்ற வேண்டும் என அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.  பொய் செய்திகளை பகிர்வது போன்ற  கவனக்குறைவான அணுகுறை, பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தடுத்துள்ளது எனவும் அவர் கூறினார். 

சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு பி. இளங்கோவன் பேசுகையில், ‘‘ இந்த தலைப்பு தற்போதைய கொவிட் சூழலில் மிகவும் பொருத்தமானது என கூறினார். இந்த நெருக்கடியை ஒவ்வொருவரும் வாய்ப்பாக பயன்படுத்தி, கற்பித்தல் மற்றும் கற்றலில் வழக்கமான முறைகளைவிட புதிய முறைகளை கற்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். சென்னை ரயில்வே பிரிவில் 18,000 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும், இதில் எந்த அசம்பாவிதமும் நடக்காததால், தடுப்பூசி பற்றிய வதந்திகளை மாணவர்கள் நம்ப கூடாது எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

சென்னை ஜோஹோ கார்பரேஷன் எச்.ஆர் தலைவர் திரு சார்லஸ் காட்வின் பேசுகையில், ‘‘ நம்மை இணைத்துள்ள தொழில்நுட்பத்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது முக்கியம் என கூறினார். சுய பொறுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை இந்த பெருந்தொற்று கற்றுக்கொடுத்த அடிப்படை ஒழுங்குமுறை விதிகள் என்றும், அதேபோல் வரும் டிஜிட்டல் கல்வி யுகத்தில் சுயமாக கற்பது முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கூறினார். எதிர்மறையான விஷயங்களை முற்றிலும் தவிர்த்து மாணவர்கள் தங்கள் பலத்தை வளர்த்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பல நிறுவனங்கள் சிறிய அளவில் இருந்து பில்லியன் டாலர் கம்பெனிகளாக மாறியதில் பின்னணியில் இருந்த நபர்களை அவர் உதாரணங்களாக எடுத்துக் கூறினார்.

கோவை, இன்பனைட் எட்ஜ் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் திரு இம்ரான் அகமது பேசுகையில், ‘‘ ஒருவரின் வெற்றிக்கு தகவமைப்பு முறை மிக முக்கியம் என கூறிய அவர், இன்றைய உலகில் நிலைத்திருக்க, உருவாக்கும் திறன்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் எம்.தெய்வநாயகி நிறைவுரையாற்றினார்.

இறுதியில், கோவை களவிளம்பரத்துறை அலுவலகத்தின் துணை இயக்குனர் திருமதி கரீனா பி தெங்கமம் நன்றி தெரிவித்து இணைய கருத்தரங்கை நிறைவு செய்தார்.

இந்த இணைய கருத்தரங்கு நிகழ்ச்சிகளை திருமதி ஜெயா தொகுத்து வழங்கினார். இந்த இணைய கருத்தரங்கில் பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

*************

 



(Release ID: 1726318) Visitor Counter : 63


Read this release in: English