பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கும் நோயாளிகளுக்கு இலவச தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளை மீண்டும் தொடங்க மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்

Posted On: 21 MAY 2021 4:32PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனைத்து 20 மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான கொவிட் ஆய்வு கூட்டத்தை நடத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங், கிராமப்புற மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கும் நோயாளிகளுக்கு இலவச தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளை மீண்டும் பெரிய அளவில் தொடங்க வலியுறுத்தினார்.

ஷிப்ட் முறைப்படி அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களை தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளுக்காக பணியில் அமர்த்த வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ளதாகவும், இதன் மூலம் மாவட்ட மருத்துவமனைகளின் சுமை பெருமளவில் குறையும் என்றும் அவர் கூறினார்.

தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முன்வந்துள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர் குழுக்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும்  மாவட்ட ஆட்சியர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம், பெருந்தொற்று குறித்து சமூக ஊடகங்களில் பரவிவரும் சுய மருத்துவ முறைகளையும் முறியடிக்க முடியும் என்று அவர் கூறினார்.

கொவிட் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்குமாறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நேர்மறை தகவல்கள் மற்றும் கொரோனா மேலாண்மையில் சிறந்த நடைமுறைகளை தொடர்ந்து ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறும் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி வழங்கலை மக்களுக்கு தோழமையான வகையில், துரிதமான முறையில், மக்கள் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் மற்றும் சமூக சமுதாய அமைப்புகளின் பங்களிப்போடு மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

*****************



(Release ID: 1720699) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi