பிரதமர் அலுவலகம்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை விடுவித்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 MAY 2021 6:39PM by PIB Chennai

அனைத்து விவசாய நண்பர்களுடனான இந்த கருத்துப் பரிமாற்றம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் புதிய தன்னம்பிக்கையையும் உருவாக்குகிறது. நமது அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள் கூறியவாறு, பகவான் பசவேஸ்வராவின் பிறந்த நாள் மற்றும் பரசுராம ஜெயந்தி ஆகியவற்றையும் இந்நாள் குறிக்கிறது. புனித விழாவான அட்சய திருதியையும்  கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா காலக்கட்டத்தில் நாட்டு மக்களின் மன உறுதி திடமாகவும், பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் வலிமை மேலும் அதிகரிக்கட்டும் என்ற விருப்பத்துடன் அனைத்து விவசாய சகோதரர்கள் உடனான எனது  கலந்துரையாடலை முன்னெடுத்துச்செல்ல விரும்புகிறேன். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள், மத்திய அமைச்சரவையின் எனது இதர நண்பர்கள், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநில அரசுகளின் மரியாதைக்குரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடு முழுவதிலுமிருந்து விவசாய சகோதர, சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மிகவும் சவாலான தருணத்தில் இன்று நாம் இந்த விவாதத்தை நடத்துகிறோம். கொரோனா காலத்திலும் நாட்டில் விவசாயிகள் வேளாண் துறையில் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதோடு, மிக அதிகளவில் உணவு தானியங்களை உற்பத்தி செய்து, விவசாயத்தில் புதிய முறைகளை ஆய்வு செய்து வருகின்றனர். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மற்றொரு தவணை உங்களது நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரவிருக்கின்றது. விவசாயத்தின் புதிய சுழற்சியின் துவக்கத்தை குறிக்கும் புனித விழாவான அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் இன்று ரூ. 19,000 கோடி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். முதன்முறையாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதனால் பயனடையவிருக்கிறார்கள். இன்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது முதல் தவணையை பெற்றுள்ளார்கள். விவசாயிகளின் பெயர்கள் மாநிலங்களிடமிருந்து பெறப்படுகையில், விவசாய பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தினால், குறிப்பாக சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் பயனடைகிறார்கள். இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளில் இதுபோன்ற விவசாய குடும்பங்களுக்கு இந்த தொகை பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 1,35,000 கோடி, ஏறத்தாழ 11 கோடி விவசாயிகளைச் சென்றடைந்துள்ளது. அதாவது, ரூ. 1,25,000 கோடிக்கும் அதிகமான தொகை, இடைத்தரகர்களின்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. தேவை அதிகம் இருப்பவர்களுக்கு நேரடியாகவும், விரைவாகவும், முழு வெளிப்படைத் தன்மையிலும் உதவிகளை வழங்குவதில் அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

விளைப் பொருட்களுக்கான அரசின் கொள்முதலில் விவசாயிகளுக்கு துரிதமாகவும், நேரடியாகவும் பலன்களை வழங்குவதும் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது.  கொரோனா சவால்களுக்கு மத்தியிலும், விவசாயிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க உற்பத்தியை மேற்கொண்ட நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான கொள்முதலில் அரசும் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. முன்னதாக, நெல்லை வாங்குவதிலும் தற்போது கோதுமையை வாங்குவதிலும்சாதனை படைக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் கடந்த ஆண்டைவிட 10% அதிகமாக இந்த ஆண்டு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோதுமைக்கான கொள்முதலாக இதுவரை  சுமார் ரூ. 58,000 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, மண்டிகளில் விற்பனை செய்யப்படும் விளைப் பொருட்களுக்கான தொகையை பெறுவதற்கு, விவசாயிகள் தற்போது நீண்ட நாட்கள் காத்திருந்து கவலை அடையத் தேவையில்லை. விவசாயிகளுக்கு உரிமையுள்ள தொகை, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் முதன்முறையாக இந்த நேரடி பணப்பரிமாற்ற வசதியை பெறுவதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை சுமார் ரூ. 18,000 கோடியும், ஹரியானாவின் விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ. 9000 கோடியும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. நேரடியாக தங்களது வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நண்பர்களே,

விவசாயத்தில் புதிய தீர்வுகளையும் வாய்ப்புகளையும் உருவாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் நடவடிக்கை அந்த வகையில் அமைகிறது. இதுபோன்ற பயிர்கள், குறைந்த செலவில் கிடைப்பதுடன், மண்ணிற்கும், மனித ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் சிறந்த தொகையையும் ஈட்டுகிறது. சிறிது நேரத்திற்கு முன்னர் இதுபோன்ற வேளாண்மையில் ஈடுபடும் ஒரு சில விவசாயிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். அவர்களது மன உறுதியையும் அனுபவங்களையும் அறிந்து மிகவும் உற்சாகமடைகிறேன்.  தற்போது கங்கை ஆற்றின் இரு புறங்களிலும் ஐந்து கிலோமீட்டருக்குள் உள்ள பகுதிகளில் இயற்கை வேளாண்மை வெகுவாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் களத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனம், மழையின்போது கங்கை ஆற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்க முடியும். அதேபோல இயற்கை விவசாய முறையும் பெருமளவில் ஊக்கப்படுத்தப்பட்டுவருகிறது. அதேவேளையில் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு சுலபமாக வங்கி கடன்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிசான் கடன் அட்டைகளை வழங்குவதற்காக ஓர் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளைப் பயன்படுத்தி ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை விவசாயிகள் பெற்றுள்ளார்கள். கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன் வளங்களுடன் தொடர்புடைய விவசாயிகளும் இதனால் மிகவும் பயனடைகிறார்கள். அண்மையில் அரசு எடுத்துள்ள மற்றுமொரு முக்கிய முடிவினால் எனது விவசாய சகோதர சகோதரிகள் பயனடைவார்கள், ஏனென்றால் இது, அவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். கொரோனா காலத்தைக் கருத்தில்கொண்டு, விவசாய கடன் அட்டைகள் மீதான தொகை அல்லது புதுப்பித்தலுக்கான கடைசி தேதியை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்து விவசாயிகளும் தங்களது நிலுவைத் தொகையை ஜூன் 30-ஆம் தேதி வரை செலுத்தலாம். இவ்வாறு நீட்டிக்கப்பட்ட காலத்திலும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியின் பயன் தொடர்ந்து கிடைக்கும்.

நண்பர்களே,

கொரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு அபரிதமானது. உங்களது முயற்சிகளின் பலனாகத் தான் உலகின் மாபெரும் விலையில்லா ரேஷன் திட்டத்தை கொரோனா காலத்தில் இந்தியா மேற்கொள்கிறது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 8 மாதங்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக அரசு ரூ. 26,000 கோடி செலவு செய்கிறது. விலை இல்லா ரேஷன் பொருட்களை வாங்குவதில் ஏழை மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாததை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். 

நண்பர்களே,

100 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற பெருந்தோற்று உலகிற்கு சோதனை அளிக்கிறது. கண்களுக்குப் புலப்படாத எதிரி நம்முன் இருக்கிறது. இந்த எதிரி, உருமாற்றம் அடையும் தன்மையைப் பெற்றிருப்பதால் நமது அன்பிற்குரிய ஏராளமானோரை நாம் இழந்துள்ளோம். சில காலங்களாக நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை, ஏராளமான மக்கள் கடந்து வந்துள்ள வலியை நான் உணர்கிறேன். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது எழுந்துள்ள அனைத்துத் தடைகளும் தீர்க்கப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் அரசின் அனைத்து துறைகளும், அனைத்து வளங்களும், நம் நாட்டின் பாதுகாப்புப் படைகளும், நமது விஞ்ஞானிகளும், அனைவரும் ஒன்றிணைந்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொவிட் மருத்துவமனைகள் துரிதமாக அமைக்கப்பட்டு வருவதுடன் புதிய தொழில்நுட்பத்தில் பிராணவாயு ஆலைகள் நிறுவப்படுகின்றன. நமது முப்படைகளான விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் இந்தப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவிற்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு ஆக்சிஜன் ரயில்கள் மிகப்பெரும் ஊக்கமளிக்கின்றன. நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் பிராணவாயுவை விநியோகிப்பதில் இந்த சிறப்பு ரயில்கள் சேவையாற்றி வருகின்றன. பிராணவாயு டேங்கர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள், இடையறாது பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆய்வக தொழிற் நுட்பனர்கள், அவசர சிகிச்சை வாகன ஓட்டிகள், மாதிரிகளை சேகரிப்போர் முதலியோர் 24 மணி நேரமும் செயல்படுகிறார்கள். நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களில் அரசும் மருந்தக துறையும் இணைந்து அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தியை பெருமளவில் அதிகரித்துள்ளன . மருந்துகள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. இதுபோன்ற நெருக்கடியான தருணத்தில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பதுக்குவது மற்றும் வெளி சந்தையில் அவற்றை விற்பது போன்ற நடவடிக்கைகளில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை நான் வலியுறுத்துகிறேன். இது, , மனித நேயத்திற்கு எதிரான செயல். இந்தியா, வீரத்தை இழக்கும் நாடல்ல. இந்தியாவோ அல்லது எந்த ஒரு இந்தியனோ துணிச்சலை இழக்க மாட்டார்கள். நாம் போராடி வெற்றி பெறுவோம்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கிராமங்களில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும், சகோதர, சகோதரிகளும் கொரோனா தொற்றுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஊரகப் பகுதிகளில் இந்தப் பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த சவாலை எதிர் கொள்வதற்காக ஒவ்வொரு அரசும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரகப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் முக்கியம். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தனிநபர், குடும்பம் மற்றும் சமூக நிலைகளில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மூக்கு மற்றும் வாயை முழுவதும் மறைக்கும் வகையில் முகக் கவசத்தைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இரண்டாவதாக, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். முதலில் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பிறகு விரைவாக கொரோனா பரிசோதனையைச் செய்துக் கொள்ளுங்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களே,

தடுப்பூசி தான் கொரோனாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்புக் கவசம். தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்துகிறது. இதுவரை சுமார் 18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுவதால், உங்களது முறைக்காக காத்திருந்து, தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். இதன் மூலம் நமக்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் தீவிரமான நோயின் அபாயமும் குறைகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் முகக் அணிவது, 2 அடி இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவை பின்பற்றப்பட வேண்டும். அனைத்து விவசாய நண்பர்களுக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****************



(Release ID: 1718807) Visitor Counter : 261