சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இப்போது என்எப்ஏஐ-யின் வலைதளத்தில் வாய்வழி வரலாற்றின் பெரும் பொக்கிஷம்

8000 நிமிட நேர ஆடியோ பேட்டிகள், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில்: ஆன்லைனில் கிடைக்கின்றன

Posted On: 03 MAY 2021 2:40PM by PIB Chennai

இந்திய சினிமாவின் தந்தையான தாதாசாகிப் பால்கேயின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (என்எப்ஏஐ) , ஏராளமான ஆடியோ பதிவுகள் அடங்கிய பெரும் பொக்கிஷத்தை பொது தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த பழம்பெரும் கலைஞர்களின் சுமார் 8000 நிமிட நேரப் பேட்டிகள் தற்போது என்எப்ஏஐ-யின் வலைதளத்தில் கிடைக்கிறது. மவுனப்பட காலத்தில் இருந்து இந்திய திரைப்படத்துறை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்களின் கவர்ச்சிகரமான கலைப் பயணக் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. என்எப்ஏஐ-யின் ஆராய்ச்சி திட்டத்தின், வாய்வழி வரலாற்றுத் திட்டத்தின் ஒருபகுதியாக பெரும்பாலும், 1980-களில் இந்தப் பேட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரபலமான திரைப்படத்துறை ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு, பேட்டிகள், உலக சினிமாவின் சுவையான தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

‘’இந்திய சினிமாவைப் பற்றி படித்து தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு, மேற்கோள் குறிப்புகளாக இந்தப் பெரும்  ஆடியோ பொக்கிஷம் உருவாகியிருப்பது குறித்து நாங்கள் பெருமகிழ்வு கொண்டுள்ளோம். இந்திய சினிமாவைப் பற்றிய அறிவைப் பரப்பவேண்டும் என்ற என்எப்ஏஐ-யின் முக்கிய நோக்கமாக இது உள்ளது. கடந்த காலத்தின் இந்தக் குரல்களை உலகம் முழுவதும் இப்போது கேட்பது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்’’,என்று என்எப்ஏஐ-யின் இயக்குநர் திரு.பிரகாஷ் மக்தூம் கூறினார்.

தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம், வங்காளி ஆகிய ஐந்து மொழிகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 8000 நிமிட நேரத்துக்கான 53 பேட்டிகள் இதில் உள்ளன. ஜே.பி.எச். வாடியா, அக்கினேனி நாகேஸ்வர ராவ், விஜய் பட், பி. பானுமதி, எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.கே.ராதா, பி.லீலா, சி.ஹொன்னப்ப பாகவதர், ஸூன்சாரோ பவார், தாதா சால்வி, சந்திரகாந்த் கோகலே, ஆர்.எம். கிருஷ்ணசாமி, எஸ்.வி.வெங்கட்ராமன், ஆர். ராமமூர்த்தி, கே.எஸ். பிரகாஷ், வி.கோபாலகிருஷ்ணன், ஆர்.பி.லட்சுமிதேவி, சாகு மோடக், .மொகமது, வி.வி.பட், விவேக், விஷ்ணுபந்த் ஜாக், நானாசாகிப் சாத்தே, கன்பத்ராவ் போந்த்ரே, நிலுபுலே, சரத் தல்வால்கர், ஷோபா சென், சூர்யகாந்த் மந்தாரே, சித்தரஞ்சன் கோல்காத்கர், சவுமித்ர சாட்டர்ஜி உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் பேட்டிகள் இதில் அடங்கும். இதில் மிக நீண்ட பேட்டி, அனசூயா ராய் சவுத்ரி, பிரபல வங்கமொழி நடிகரான சவுமித்ர  சாட்டர்ஜியிடம்  எடுத்த 584 நிமிடப் பேட்டியாகும். இத்தகைய நீண்ட நேர பேட்டிகள் அந்த கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் பற்றி தெரிந்து கொள்ள உதவுவதுடன், இந்திய திரைப்படத் துறையில் பல ஆண்டுகாலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றி ஆழமாக அறியவும் பயன்படும்

இந்தியத் திரைப்படத்துறை தந்தையுடன் நெருங்கிப் பணியாற்றிய டி.ஜி.பால்கேயின் ஏராளமான சக கலைஞர்களின் பேட்டிகள் இடம் பெற்றிருப்பது, என்எப்ஏஐ வாய்வழி வரலாற்றுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். பல்வேறு வகையான பின்புலங்களிலிருந்து, திரைப்படத் துறையில் நுழைந்து, பால்கேயின் இந்துஸ்தான் சினிமாப் படக்கம்பெனியில் இந்தக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரமும், தாதா சாகிப் பால்கேயின் மகளுமான மந்தாகினி பால்கே நீ அத்வாலேயின் நீண்ட பேட்டியில், அவர் காலியமர்தன்(1919) படத்தில் நடித்தது பற்றி தெரிவித்துள்ளார். கன்பத்ராவ் தம்பத், சகாதேவ்ராவ் தப்கிரே, பாபுராவ் பட்டேல், நாராயண் தம்பத், ஹரிபாவ் லொனாரே, வசந்த் சிண்டே ஆகிய மவுனப்பட காலக் கலைஞர்கள் பலர் பால்கே சினிமா கம்பெனியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியது பற்றிய தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம். பால்கேயுடன் தாங்கள் நெருங்கிப் பழகியதன் மூலம் கிடைத்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பால்கேயின் திரைப்பட ஆக்கத்தின் நுணுக்கம், அவரது மனிதாபிமான அணுகுமுறை போன்ற மறுபக்க தகவல்கள் இந்தப் பேட்டிகளின் மூலம் அறியக் கிடைக்கின்றன.

என்எப்ஏஐ-யின் வாய்வழி வரலாற்றுத் திட்டம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது ஆடியோ கேசட்டுகளில் மட்டுமே பேட்டிகள் பதிவு செய்யப்பட்டன. தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டதும், இந்தத் திட்டம் ஆடியோ-காணொலி வரலாற்றுத் திட்டமாக 2008-ல் மாற்றப்பட்டது. இதில் பேட்டி தொடர்புடைய திரைப்படக் காட்சிகள் இணைக்கப்பட்டன. புகைப்படங்கள், சுவரொட்டிகள் போன்ற காட்சிகளும் பேட்டிகளில் இடம்பெற்று மெருகூட்டின.

1980, 90-களில் இந்தப் பேட்டிகள் கலைஞர்களின் வீடுகளுக்கே சென்று அறிஞர்களால் எடுக்கப்பட்டன. பிரபாத் திரைப்பட நிறுவனத்தின் கலைஞரும், திரைப்பட வரலாற்று அறிஞருமான பாபு வாத்வே பெரும்பாலான பேட்டிகளை மராத்தி மொழியில் எடுத்துள்ளார். மற்றொரு திரைப்பட வரலாற்று  அறிஞரும், எழுத்தாளருமான ராண்டார் கை, தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் பல ஆழமான பேட்டிகளை எடுத்துள்ளார். மராத்தியில் 26 பேட்டிகளும், தமிழில் 10, தெலுங்கில் 3, ஆங்கிலத்தில் 12, வங்க மொழியில் 2 பேட்டிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பதிவுகளை https://nfai.gov.in/audio_interview.php என்ற தளத்தில் கிளிக் செய்து கேட்கலாம். ஆடியோ கேட்கும் போது, பேட்டியின் ஆங்கில மொழியாக்கத்தை  மறுபக்கத்தில் கேட்கலாம். இயன்ற இடங்களில், கலைஞர்களின் புகைப்படங்கள், சுவரொட்டிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

‘’பெரும்பாலான பேட்டிகள் நாற்பதாண்டு பழமையானவை என்பதால், அவற்றை டிஜிட்டல்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்தப் பேட்டிகளின் குரல் தரத்தை மேம்படுத்தும் வகையில்எப்டிஐஐ-யின் ஒலிப்பதிவு துறையின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம்’’, என்று திரு பிரகாஷ் மக்தூம் கூறியுள்ளார். ‘’இந்தப் பேட்டிகளில் பெரும்பாலானவை பல்வேறு இந்திய மொழிகளில் உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் இந்திய சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள இது பயன்படும். தாதாசாகிப் பால்கேயின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த தகவல் களஞ்சியத்தை திரைப்பட ஆர்வலர்களுக்கு கிடைக்கச் செய்வது, இந்திய சினிமாவின் தந்தைக்கு அளிக்கும் சரியான மரியாதையாக நிச்சயம் இருக்கும்’’ என அவர் மேலும் கூறினார்.

 

******


(Release ID: 1715664) Visitor Counter : 70
Read this release in: English