சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்றின்போது பிராணவாயு செறிவூட்டிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Posted On: 01 MAY 2021 11:51AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையுடன் இந்தியா போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாதிப்புகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிராணவாயு செறிவூட்டிகளின் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது.

பிராணவாயு செறிவூட்டி என்றால் என்ன?

நாம் உயிர் வாழ்வதற்கு நமது நுரையீரல்களிலிருந்து உடலின் பல்வேறு உயிரணுக்களுக்கு சீரான பிராணவாயுவின் விநியோகம் அவசியம்.

சுவாச நோயான கொவிட்-19, நமது நுரையீரல்களில் பாதிப்பை ஏற்படுத்தி பிராணவாயுவின் அளவை அபாயகரமாக குறைக்கக் கூடும்.‌ அதுபோன்ற தருணத்தில் மருத்துவ சிகிச்சைக்கான பிராணவாயுவைப் பயன்படுத்தி, நமது பிராணவாயுவின் அளவை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுபடி, பிராணவாயுவின் அளவு 94% அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 90 சதவீதத்திற்கும் கீழ் பிராணவாயுவின் அளவு குறைந்தால் மருத்துவ அவசர நிலையாக அது கருதப்படும்.

வளிமண்டல காற்றில் சராசரியாக 78% நைட்ரஜனும், 21% பிராணவாயுவும் இருக்கும். பெயருக்கு ஏற்றவாறு பிராணவாயு செறிவூட்டிகள், சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, நைட்ரஜனை வடிகட்டி, பிராணவாயுவின் செறிவுத் தன்மையை அதிகப்படுத்தும்.

பிராணவாயு சிலிண்டர்களின் பணியை, குழாய்கள் அல்லது பிராணவாயு கவசங்களின் மூலம் பிராணவாயு செறிவூட்டிகள் மேற்கொள்ளும்சிலிண்டர்களில் அவ்வபோது பிராணவாயு நிரப்பப்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் பிராணவாயு செறிவூட்டிகள், 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் தொடர்ந்து இயங்கும் தன்மை உடையவை.

நிமிடத்திற்கு அதிகபட்சமாக 5 லிட்டர் பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளுக்கும், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பிராணவாயுவின் தேவை ஏற்படும் நோயாளிகளுக்கும் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் பொதுமக்கள் இந்த பிராணவாயு செறிவூட்டிகளை தாங்களாகவே கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்று பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இணைய கருத்தரங்கில் பெங்களூரு புனித ஜான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கொவிட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சைதன்யா ஹெச். பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.

கொவிட்-19 தொற்றின் காரணமாக மிதமான நிமோனியாவால் பிராணவாயுவின் அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அந்த நோயாளிக்கு பிராணவாயு செறிவூட்டி உதவிகரமாக இருக்கும் என்றும், போதிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

பிராணவாயு செறிவூட்டிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அவசர கால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பி எம் கேர்ஸ்) என்ற நிதி அறக்கட்டளையின் வாயிலாக ஒரு லட்சம் பிராணவாயு செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715273

----



(Release ID: 1715364) Visitor Counter : 230


Read this release in: English , Urdu , Marathi , Punjabi