சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சட்டமன்ற தொகுதிவாரியான வேட்பாளர் தகவல் தொகுப்பு: சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ஊடகவியலாளர்களுக்காக வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2021 4:31PM by PIB Chennai
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021-ல் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கில், தொகுதிவாரியான வேட்பாளர் தகவல் தொகுப்பை சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த 249-பக்க மின்னணு கையேடு மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் (கட்சிகள் மற்றும் சுயேச்சைகள்) குறித்த தொகுதிவாரியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கையேட்டின் உதவியோடு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை ஊடகவியலாளர்கள் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொது வாக்குகள், தபால் வாக்குகள் மொத்த வாக்குகள் மற்றும் பதிவான வாக்குகளின் சதவீதம் ஆகியவற்றுக்காக தனித்தனியான பத்திகள் வழங்கப்பட்டுள்ளன.
களத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தேர்தல் முடிவுகளை வேகமாகவும், எளிதாகவும் தெரிவிப்பதற்கு இந்த விரிவான தகவல் தாள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த மின்னணு கையேட்டை https://static.pib.gov.in/WriteReadData/userfiles/PIBChennai/Final%20book.pdf என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, ஊடகவியலாளர்களுக்கு உதவும் வகையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கையேடு 2021-ஐ சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முந்தைய தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறிப்பாக கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான சிறப்பு விதிமுறைகள், 234 தொகுதி வாரியான தரவுகள், தொகுதி சீரமைப்பு விவரங்கள், தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை, வேட்பாளர்களும், வாக்காளர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்று பல்வேறு தகவல்களுடன் இந்த கையேடு விரிவாக தொகுக்கப்பட்டிருந்தது. இந்த கையேடு ஊடகவியலாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1714636)
வருகையாளர் எண்ணிக்கை : 530