சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை போதைப்பொருள் தடுப்பு முகமையால் 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

Posted On: 12 APR 2021 7:13PM by PIB Chennai

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் பயணி ஒருவரை போதைப்பொருள் தடுப்பு முகமையின் சென்னை மண்டல அதிகாரிகள் 2021 ஏப்ரல் 9 அன்று இடைமறித்தனர்.

ஹைதராபாத் வழியாக ஷார்ஜாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பையை சோதனை செய்து பார்த்த போது, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சராஸ் போதைப்பொருள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பயணியின் பெயர் சி கற்பகம் என்பதும், அவர் சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள், மேற்கண்ட பயணிக்கு போதைப்பொருளை வழங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த எம் முகைதீன் என்பவரையும் கைது செய்தனர்.

சென்னை போதைப்பொருள் தடுப்பு முகமையின் மண்டல இயக்குநர் திரு அமித் கவாத்தே, கண்காணிப்பாளர் திரு பிரகாஷ் ஆர், கண்காணிப்பாளர் திரு சுரேஷ் குமார், விசாரணை அதிகாரி திரு சண்முகம் மற்றும் இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட  இதர அலுவலர்களை போதைப்பொருள் தடுப்பு முகமை பாராட்டுகிறது.

ஹாஷிஷ் என்றும் அழைக்கப்படும் சராஸ் போதைப் பொருள் கஞ்சா செடிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் பெரும்பாலும் கஞ்சா விளைவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை செய்திக் குறிப்பு ஒன்றில், சென்னை போதைப்பொருள் தடுப்பு முகமையின் மண்டல இயக்குநர் திரு அமித் கவாத்தே, ஐஆர்எஸ், தெரிவித்துள்ளார்.

**********




(Release ID: 1711228) Visitor Counter : 61


Read this release in: English