சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ 79.23 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம். சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல், 2 பேர் கைது

Posted On: 22 FEB 2021 7:30PM by PIB Chennai

திங்களன்று காலை பயணி ஒருவர் வருகைப் பகுதியில் உள்ள கழிவறைக்குள் போவதை கண்காணிப்பு பணியில் உள்ள அதிகாரிகள் கவனித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் அவர் வெளியில் வராத காரணத்தால், கழிவறைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கழிவறை ஒன்றில் அப்பயணி ஒளிந்திருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையின் போது, கடத்தும் நோக்கில் தங்கத்தை கொண்டுவந்ததாகவும், பயத்தின் காரணமாக கழிவறையில் ஒளிந்து கொண்டதாகவும் அவர் கூறினார். ரூ 71.85 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூரைச் சேர்ந்த அஜ்மல் கான் (26) என்ற அந்த பயணி, துயாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தவராவார். அவர் கைது செய்யப்பட்டார்.

ஞாயிறன்று இரவு நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், துபாய் செல்வதற்காக ஃபிளை துபாய் விமானத்தில் ஏறவிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரகுமான் ஹமீத் (25) சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்டதில், அமெரிக்க டாலர்கள், சவுதி ரியால்கள் உள்ளிட்ட ரூ 7.38 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கண்டறியப்பட்டு, ஃபெமா விதிமுறைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

 

அவர் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

ரூ 71.85 மதிப்பிலான 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ 7.38 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் என  மொத்தம் ரூ 79.23 லட்சம் மதிப்பிலான பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது  செய்யப்பட்டனர்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.



(Release ID: 1700207) Visitor Counter : 53


Read this release in: English