ஜவுளித்துறை அமைச்சகம்

கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 11 FEB 2021 3:36PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜவுளி அமைச்சர் திருமதிஸ்மிரிதி ஜுபின் இரானி, கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஏற்றுமதி குழுக்களால் மெய்நிகர் முறையில் சர்வதேச கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவால் ஏழு கண்காட்சிகளும், கைவினை பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு மற்றும் கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவால் ஒன்பது நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பல்வேறு கைத்தறி திட்டங்களின் பலன்களை நெசவாளர்களுக்கு கிடைக்க செய்வதற்காகவும், அவை குறித்த விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்துவதற்காகவும் 534 நிகழ்ச்சிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டன.

மேலும், முத்ரா கடன் மீது வட்டி கழிவு, நூல் மீது 10 சதவீதம் விலை மானியம், மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா, பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் காப்பீட்டு பலன்கள் நெசவாளர்களுக்கும் கைவினை கலைஞர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

தறி மற்றும் உபகரணங்கள் வாங்கும் செலவில் 90 சதவீதத்தை ஜவுளி அமைச்சகம் ஏற்கிறது.

உலகிலேயே ஆறாவது பெரிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளராக திகழும் இந்திய ஜவுளித் துறை, அமெரிக்க சந்தைக்கு அதிக அளவில் ஏற்றுமதிகளை செய்து வருகிறது. 2019-20-ஆண்டின் நாட்டின் ஒட்டுமொத்த வணிக ஏற்றுமதிகளில், ஜவுளித் துறையின் பங்கு 11 சதவீதமாகும்.

ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஏற்றுமதி பொருட்களுக்கான வரி சலுகைகளை 2021 ஜனவரி 1 முதல் அரசு நீட்டித்தது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சர்வதேச சில்லரை வியாபாரிகள் தங்கள் ஜவுளித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவை நோக்கி ஈர்க்கும் வகையில், ஒரே வணிகப் பெயரையுடைய பொருட்களின் சில்லரை வர்த்தகத்திற்கான அந்நிய நேரடி முதலீட்டு அளவை 100 சதவீதமாக அரசு உயர்த்தியது.

பல்முனை சில்லரை வர்த்தகத்திற்கான அளவு 51 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது.

ஜவுளித் துறையில் திறன் வளர்த்தலுக்காக சமர்த் என்னும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கைத்தறிகள், கைவினைப் பொருட்கள், பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் சணல் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

ஜவுளித் துறை, தொழில்துறை சங்கங்கள், மாநில அரசு முகமைகள், ஜவுளி அமைச்சகத்தின் துறை வாரியான அமைப்புகள் ஆகியவை சமர்த் திட்டத்தை செயல்படுத்தும் பங்குதாரர்களாக செயல்படுவார்கள்.

-------



(Release ID: 1697136) Visitor Counter : 244


Read this release in: English , Marathi